Published : 26 Sep 2022 06:21 AM
Last Updated : 26 Sep 2022 06:21 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இப்போதுபோல எப்போதும், தமிழின் திசையாகவே இருக்க வேண்டும் என ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகரும், சிந்து சமவெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் கூறினார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த 2013 செப்.16-ம் தேதி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழாவும், ‘யாதும் தமிழே’ விழாவும் நடத்தப்பட்டு வந்தது. கரோனாபரவலின்போது, பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 10-ம்ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தமிழைப் போற்றும் ‘யாதும் தமிழே’ விழாவைமீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் நேற்று பிற்பகல் இந்த விழா நடைபெற்றது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றார். இதில், ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகரும், சிந்து சமவெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவின் சிறப்பம்சமாக, தங்கள் செயல்பாடுகளால் தமிழ் சமூகத்தை செழுமைப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்ற 5 ஆளுமைகளுக்கு ‘தமிழ்திரு’ விருதுகள் வழங்கப்பட்டன.
மார்க்சிய அறிஞரும், மனித உரிமைசெயற்பாட்டாளருமான எஸ்.வி.ராஜதுரை, நில உரிமைப் போராளி கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன், சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் சி.எம்.முத்து, தொழிலாளர் நல செயற்பாட்டாளர் ஆர்.கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை ஒடிசா முதல்வரின் தலைமைஆலோசகரும், சிந்து சமவெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: சிறந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கியதை, இத்தனை நாட்கள் நான் உழைத்ததற்கு கிடைத்த பயனாக எண்ணுகிறேன்.
கரோனா காலகட்டத்தில் பல மாநில கட்டிடத் தொழிலாளர்களும் திடீரென இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அது இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். ரயிலில் அடிபட்டு இறந்தவர்களும் பலர் உண்டு. ஆனால், ஒடிசாவுக்குள் இதுபோன்ற நிகழ்வு நடக்கவில்லை. நாங்களே அவர்களது மாநிலத்தின் எல்லைகளில் கொண்டு சென்று விட்டோம். மேலும், வெளிமாநிலங்களுக்கு பணிக்கு சென்று கைவிடப்பட்ட எங்கள் மாநில தொழிலாளர்கள் 9 லட்சம் பேரை, சிவப்பு கம்பளம் விரித்து ரயில் நிலையங்களில் வரவேற்றோம். ஒடிசாவில் யார் ஒருவரும் கரோனாவுக்காக ஒரு பைசாகூட செலவழித்தது இல்லை. அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொண்டது. 17 மாநிலங்களுக்கு ஆக்சிஜன்களை அனுப்பி வைத்தோம்.
தமிழுக்கு என்று ஒரு திசை இருக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவன், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று சொல்ல முடிகிறது என்றால், அது ஒரு மனிதரின் குரல் அல்ல, ஒரு நாகரிகத்தின் குரல். தமிழ் மொழிக்கு எந்த அடையாளமும் கிடையாது. அடையாளங்களை எல்லாம் கடந்து நிற்பதுதான் தமிழ் மொழி. புவியை பற்றிய புரிதல், சுற்றுச்சூழலை பற்றிய புரிதல், உலகம் பற்றிய புரிதல்தான் தமிழின் திசை. பசி தீர்த்தல், பட்டினியை தீர்த்தல், பசித்தவனுக்கு உணவு வழங்கல் என்பதை தமிழ் ஓர்அறமாக, சமயமாக, மதமாக அரணாகநினைக்கிறது. திருக்குறள், சிந்து சமவெளி, சங்க இலக்கியம் ஆகிய மூன்றும்இல்லையென்றால் இந்தியாவின் வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும். தமிழனாக என்னுடைய விருப்பம் என்னவென்றால், இந்து தமிழின் திசை இப்போதுபோல எப்போதும், தமிழின் திசையாகவே இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையமும், பிரதமர் அலுவலகமும் எனக்கு விருதுகள் வழங்க பரிந்துரை செய்திருந்தன. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டேன். அதைவிட இந்த விழாவில், 5 ஆளுமைகளுக்கு ‘தமிழ்திரு’ விருது வழங்கியதை பெருமையாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியின் செலபிரேஷன் பார்ட்னராக சங்கர் ஐஏஎஸ் அகாடமி, லலிதா ஜுவல்லரி, சைக்கிள் பிராண்டு அகர்பத்திகள், அரோமா டெய்ரி புராடக்ட்ஸ், நெக்ஸா, மாருதி சுஸுகி, அரீனா ஆகியவை இணைந்துள்ளன. இந்த நிகழ்வின் முழு தொகுப்பை BS Value app-ல் விரைவில் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT