

சென்னை: ஆட்டோ முன்பதிவு செயலியை அரசு சார்பில் விரைந்து தொடங்கவேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம், ஆட்டோ தொழிற்சங்கத்தினர் நேரில் வலியுறுத்தினர். சென்னை, பல்லவன் இல்லத்தில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கரை, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் சந்தித்தனர்.
சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், தொமுச பொதுச் செயலாளர் எம்.சண்மும்எம்பி., பொருளாளர் கி.நடராஜன்ஆகியோர் தலைமையில் இந்தச்சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீட்டர் கட்டண உயர்வு, அரசு சார்பில்ஆட்டோ முன்பதிவு செயலி தொடங்குதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இச்சந்திப்பு குறித்து சிஐடியு ஆட்டோ சங்க மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: மீட்டர் கட்டண உயர்வு குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் அறிவிப்பு வெளியிடுவதற்கான முயற்சிகொள்வதாக அமைச்சர் தெரிவித்தார். ஆட்டோ முன்பதிவுக்கான செயலி தொடங்குவது தொடர்பாக ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டு அதனை அமல்படுத்த துறை ரீதியாகப் பேசி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில், தொமுச மாவட்டத் தலைவர் ஐசிஎப் துரை, ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் மு.சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.