

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்துவரும் தமிழகமண்ணில் அரசியல் உள்நோக்கத்தோடு சில பிரிவினைவாத சக்திகள் அண்மைக்காலமாக வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, அரசியல் செய்ய முற்படுகின்றன. கல்வியில் சிறந்த தமிழகத்தை காவிமயமாக்கி, பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கின்றன.
ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, பொய்யைப்பரப்பும் இந்தப் பிரிவினைவாதிகளின் வெறுப்பு பரப்புரைக்கு எதிராக அன்பை, அமைதியை,நல்லிணக்கத்தை முன்னெடுப்போம். காந்தி பிறந்த அக். 2-ம் தேதி அன்பையும், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி, தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமூக நல்லிணக்கப் பேரணிகளை நடத்துவது என விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்தப் பேரணியில் கட்சி வேறுபாடு பார்க்காமல், ஜனநாயகசக்திகள் அனைவரும் பங்கேற்று, தமிழ்ச் சமூகத்தின் தனித்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட முன்வரும்படி அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.