சுனாமி பாதிப்புகளை நேரில் சென்று பார்க்காதது ஏன்?: ஜெயலலிதா கேள்விக்கு கருணாநிதி பதில்

சுனாமி பாதிப்புகளை நேரில் சென்று பார்க்காதது ஏன்?: ஜெயலலிதா கேள்விக்கு கருணாநிதி பதில்
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சமூகநலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் பேசும்போது, அந்த துறையில் திமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். சுனாமி பேரழிவால் பெற்றோரை இழந்து தவித்த சிறுவர்கள், வளர்இளம் பெண்க ளுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.

அப்போது முதல்வர் ஜெய லலிதா குறுக்கிட்டு, சுனாமி ஏற்பட்ட போது அவர் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ததாகவும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வான நான் சென்னையில் இருந்து கொண்டே சேப்பாக்கம்கூட சென்று, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கவில்லை என்றும் தெரிவித் துள்ளார். தமிழகத்தில் டிசம்பர் 26ம் தேதி காலை சுனாமி ஏற்பட்டது. அதற்கு 2 நாட்கள் முன்பிருந்தே விலாப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டு, முதலில் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அதில் நலம் ஏற்படாததால், 26ம் தேதி அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன்.

அப்போது, என்னைப் பற்றி தவறான வதந்தி பரவி ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வீட்டுக்கு வந்ததால், அந்த செய்தியை மறுத்து தொலைக் காட்சி செய்தி மூலம் பேட்டி கொடுத் தேன். மருத்துவமனைக்கு சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி வந்து என் உடல்நிலை குறித்து விசாரித்தபோது, சுனாமி நிவாரண நிதிக்காக திமுக சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினேன். முதல்வர் பொறுப்பில் இருப்பவர், சட்டமன்றத்தில் பேசும்போது உண்மைக்கு மாறான தகவலை- சென்னையில் இருந்துகொண்டே நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கவில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டுவது சரியல்ல. உண்மைக்கு மாறான அந்த குற்றச்சாட்டை மறுத்து உண்மையைச் சொல்ல திமுக உறுப்பினர்கள் முற்பட்டபோது, அதற்கும் சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை என்றால், அது சரியானது தானா? பொதுவாக முதல்வர் பேசிவிட்டால், அதன் பிறகு மீறி யாரும் பேசக் கூடாது என்றால், நடைபெறுவது ஜனநாயகம்தானா? என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in