

ரூபாய் நோட்டு பிரச்சினையால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் கடலூர் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு ஒருவாரம் காலமாகிவிட்ட நிலையில் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முதலில் புதிய 2000 ரூபாய் நோட்டை வாங்க வங்கிகளில் முன் வரிசையில் பொதுமக்கள், தற்போது அதை மாற்ற முடியாமல் தவித்துவருகின்றனர். 2 நாட்களுக்குப் பின் ஏடிஎம் மையங்களில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையிலும், பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடிய நிலையிலேயே காணப்படுகிறது.
இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-களில் மட்டும் சொற்ப அளவில் பணம் கிட்டியது. இருப்பினும் பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் சில்லறைத் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டுவருகின்றனர்.
இதனிடையே வங்கிகளில் பணம் எடுக்க மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை அறிவித்துவரும் நிலையில் பொதுமக்களிடையே குழப்பம் நீடித்துவருகிறது. முதலில் ரூ.4000 வரை சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் வாரத்திற்கு இருமுறை ரூ.10000 வரை வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம், ஒருமுறை ஏடிஎம் மூலம் ரூ.2000 வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. தற்போது, சில்லறை ரூ.4500 எனவும், ஏஎடிஎம்-ல் ரூ.2500 வரை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
நடப்பது என்ன?
வங்கிகளுக்குச் சென்றால் பணம் செலுத்துவோர் மட்டும் வரலாம் எனவும், சில்லறை தேவைப்படுவோர் ஏடிஎம் மூலம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று திருப்பி அனுப்பும் நிலை தான் உள்ளது. ஆனால் ஏடிஎம் மையங்களிலோ நீண்ட வரிசை கட்டி நிற்கின்றனர்.
வங்கிகளில் அவரவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10000 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு இருந்தும், அவை அறிவிப்பாகத்தான் உள்ளது என்கின்றனர் வாடிக்கையாளர்கள். அப்படியே கிடைத்தாலும் அவை 2000 ரூபாய் நோட்டுக்களாத்தான் வழங்குகின்றனராம். கடந்த 8 தினங்களுக்கு முன் வழங்கி வந்த 100 மற்றும் 500 ரூபாய் தாள்கள் எங்கே போனது என்ற கேள்வி தான் சாமானிய மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.
இதுகுறித்து வங்கி நிர்வாகத்தினரிடம் கேட்டால், இதுவரை பெறப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களுக்கு சில்லறை வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால் வாடிக்கையாளர்களோ பெற்றுக்கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் 2000 ரூபாய் நோட்டுகள் தான் வழங்கினரே தவிர, 100 ரூபாய் நோட்டுகள் வழங்கவில்லை எனவும், அரசியல் முக்கியப் புள்ளிகளுக்கு மட்டும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை வழங்கிவிட்டதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
வங்கிகளில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளாலும், பாமர மக்கள் ஏடிஎம் மையங்களை எளிதில் இயக்கத் தெரியாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கத் துவங்கியுள்ளது.மீன் வியாபரம் முதல் நகை வியபாரம் வரை தொய்வு ஏற்பட்டுள்ளது.
சாமானிய மக்கள் அதிகமாக கூடுமிடங்களான காய்கறி வாரச்சந்தை, மீன் மார்க்கெட், பூக்கடை, டீக்கடை உள்ளிட்ட இடங்களில் வியாபாரம் தொய்வடைந்துள்ளது.முகூர்த்த நாட்களைக் கொண்ட ஜப்பசி, கார்த்திகை மாதங்களில் பரபரப்பாக இருக்கக் கூடிய நகைக் கடையிலும், பத்திரப்பதிவு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
விவசாயக் கூலி தொழிலாளர்கள்
சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் விவசாயிகள் நடவு மற்றும் களை எடுத்தல் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர்.அவ்வாறு விவசாயப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தினசரி கூலி வழங்கமுடியவில்லை என்கிறார் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஜோதி.
எங்களிடம் உர மூட்டைகள் வாங்க முடியவில்லை. அதையே கடன் சொல்லித்தான் வாங்கி வந்துள்ளோம். வங்கியில் பெற்றுள்ள விவசாயக் கடன் தொகை ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் தான் உள்ளது. வங்கிக்கு சென்றாலும் சில்லறை கிடைக்கவில்லை எனவே கடந்த 5 தினங்களாக தொழிலாளர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை. என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளோம் என்றார்.
கல்குணத்தைச் சேர்ந்த செங்கமலத் தாயார் என்ற விவசாயப் பெண்மணி கூறும்போது, ''எங்க கூலி தொழிலாளர்கள் கூப்பிட்டவுடன் வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக கூலி வழங்க முடியவில்லை என்பது உண்மைதான். எனவே அவர்கள் அனைவருக்கும் நூறு நாள் வேலைக்கான ஊதியம்பெறுவதற்கு வங்கிக் கணக்கு உள்ளதால், அந்த வங்கிக் கணக்கில் கூலியை செலுத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளர்கள் கூறும்போது, ''கடந்த 4 தினங்களாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் வெள்ளை பேப்பர் வாங்க காசு கேட்கின்றனர். அதைக் கூட வழங்கமுடியவில்லை. நாங்கள் நில உரிமதாரர்களை குறைகூற விரும்பவில்லை, வங்கிக்குச் சென்றால் எங்களை அலைக்கழிக்கின்றனர்.பணம் போடறதா இருந்தா வாங்க, எடுக்கற மாதிரி இருந்தா ஒருவாரம் போய் வாங்கன்னு திருப்பி அனுப்புறாங்க! இப்படியே போச்சுன்னா என்ன பண்றதுன்னு தெரியலீங்க. பேங்க்ல 100 ரூபா நோட்டா குடுத்தாங்கன்னா எங்க பிரச்சனை தீர்ந்துடும்'' என்றனர்.
கூட்டுறவு வங்கிகளில் ரூ.1000,500 வாங்க மறுப்பு
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நேற்று முதல் ரூ.1000 மற்றும் 500 நோட்டுகளை வாங்க வங்கி அலுவலர்கள் மறுத்துவிட்டனர். இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, ''மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பழைய ரூ.1000 மற்றும் 500 நோட்டுகளை வாங்க வேண்டாம் என உத்தரவிட்டிருப்பதால் வாங்க முடியாது'' என்று கூறிவிட்டனர். இதையடுத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் சுந்தர்ராஜிடம் கேட்டபோது, ''ரிசர்வ் வங்கி நேற்று முன் தினம் புதிய உத்தரவுப் பிறப்பித்ததைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் வாடிக்கையாளர்களிடமிருந்து பழைய 1000, 500 நோட்டுகளை வாங்குவதில்லை'' என்றார்.
நகைக் கடனும் இல்லை, அடகு வைத்தவற்றை மீட்கவும் முடியவில்லை
ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது அவசரத் தேவைக்காக நகைக்கடன் பெறுவது வழக்கம். ஆனால் கடந்த 8 தினங்களாக வங்கிகளில் நகைக் கடன் பெறமுடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள், அடகு வைத்த நகைகளை மீட்கவும் முடியவில்லை என்கின்றனர். இது குறித்து வங்கி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ''தற்போது அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம், பழைய ரூபாய் நோட்டுகள் பெறுவதில்தான் அனைத்து ஊழியர்களும் ஈடுபட்டுள்ள நிலையில் நகைக் கடன் வழங்கமுடியவில்லை. அடகு வைத்தவற்றை மீட்கவும் முடியவில்லை'' என்றனர்.
தீர்வு என்ன?
தற்போதுள்ள சூழலில் புதிய 500 நோட்டுகளை உடனடியாக புழக்கத்திற்கு கொண்டுவருவதோடு, 100 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் புழக்கத்திற்கு விடுவது தான் தற்போதய பிரச்சினைக்குத் தீர்வாகும்.
ஒவ்வொரு வங்கியின் கிளை மேலாளர்களும். மேலும் சில்லறை மற்றும் பணம் எடுப்போருக்கு விரலில் மை வைப்பது தொடர்பாக அரசு அறிவித்துள்ளதால், எங்களது பணிச்சுமை சற்று குறையும் என்கின்றனர் வங்கி அலுவலர்கள்.