

ஒட்டன்சத்திரம் அருகே விவசாய நிலத்தில் வானில் இருந்து மர்மப் பொருள் ஒன்று பலத்த சத்தத்துடன் விழுந்தது. விழுந்த பொருள் என்ன என்பதை என்பதை கண்டறியும் முயற்சியில் வருவாய்த் துறை மற்றும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது மோதுபட்டி கிராமம். இங்கு உள்ள தோட்டத்தில் நேற்று காலை 11 மணியளவில் விவசாயி ரங்கசாமி என்பவர் தக்காளி பறித்துக்கொண்டு இருந்தார். அப்போது வானில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. அவர் பார்த்தபோது கருமை நிறத்தில் ஏதோ ஒன்று கீழ்நோக்கி பலத்த சத்தத்துடன் வேகமாக வந்துகொண்டு இருந்தது. அப்பொருள் கீழே விழுந்ததும் புகை ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அவர் அலறியடித்து ஓடியுள்ளார்.
இதுபற்றி கள்ளிமந்தயம் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல்துறை யினர் வந்து பார்த்துவிட்டு கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சி யருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மர்மப் பொருள் விழுந்தது குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் திரண்டு வந்து விநோதமான அப் பொருளை பார்த்துச் சென்றனர்.
இதுகுறித்து விவசாயி ரங்கசாமி கூறும்போது, “தோட்டத்தில் வேலை செய்தபோது, பலத்த சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தபோது, வானில் இருந்து ஏதோ ஒன்று கருப்பு நிறத்தில் பூமியை நோக்கி பலத்த சத்தத்துடன் வேகமாக வந்துகொண்டு இருந்தது. கீழே விழுந்ததும் அதிகமாக புகை வந்தது. அப்பொருள் வெடித்துவிடுமோ என அஞ்சி ஓடிவிட்டேன்” என்றார்.
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மாரிமுத்து கூறும்போது, “சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினோம். அப்பொருள் எங்கிருந்து வந்தது. எதற்கு உரியது என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
கரூர்
இதேபோல், கரூர் மாவட்டம் அஞ்சூர் கொளந்தாபாளையம் அஞ்சல் அலுவலகம் எதிரே நேற்று வானில் இருந்து பெரும் சத்தத்து டன் மர்மப் பொருள் ஒன்று கீழே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அதைப் பார்க்க அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலுமினியத் தால் ஆன அப்பொருள் சுமார் 15 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.