

ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உள்ள பூசாரிபாளையத் தைச் சேர்ந்த 19 வயது பெண், கோவை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ஈரோடு மாவட்ட எஸ்பி சிபிச்சக்கரவர்த்தியிடம் கடந்த வாரம் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த என்னை, ஈரோட்டைச் சேர்ந்த வடிவேல் மற்றும் சிலர், எனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அழைத்துச் சென்றனர். பின் என்னை கட்டாயப்படுத்தி, வடிவேலுவுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி. யிடம் புகார் தெரிவித்திருந்தார்.
புகாரில் உண்மை இருப்பதை அறிந்த போலீஸார் அதனை ஏற்று, வழக்கு பதிவு செய்தனர். கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட வடிவேல், அவருக்கு உடந்தையாக இருந்த அங்கமுத்து, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மகளிர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், அங்கமுத்து ஈரோடு மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஸ்ரீபிரியாவின் கணவர். ரவிச்சந்திரன், மாநகராட்சி மூன்றாம் மண்டல உதவிக் கமிஷனர். வடிவேல், அங்கமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், ரவிச்சந்திரனை போலீஸார் தேடி வருகின்றனர்.