

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கருமன்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (55). பாஜக பிரமுகரான இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீட்டு வளாகத்தில் விழுந்து வெடித்த நிலையில், சேதம் ஏதுமில்லை.
தகவலின்பேரில் மண்டைக் காடு போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெட்ரோல் நிரப்பிய இரு பாட்டில்களில் தீயை பற்றவைத்து வீசிவிட்டுச் சென்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இச்சம்பவத்தை அடுத்து எஸ்பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கோயில்கள், பாஜக நிர்வாகிகள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.