'ஊழல் செய்ததாக நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார்' - பிடிஆருக்கு செல்லூர் ராஜூ சவால்

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ | கோப்புப்படம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ | கோப்புப்படம்.
Updated on
1 min read

மதுரை: ''நான் ஊழல் செய்ததாக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார்,'' என்று முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து நிச்சயமாக விலகத் தயார். கூட்டுறவுத் துறையில் முறைகேடு நிரூபிக்கவில்லை என்றால் நிதி அமைச்சர் அரசியலில் இருந்து விலகிக் கொள்ள தயாரா? கூட்டுறவு துறையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பரிந்துரையில் நகைக்கடன் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் எப்படி தகுதி இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியும்.

அதிமுக ஆட்சியில் களங்கம் இல்லாமல் இந்த துறை செயல்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்கு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 27 விருதுகளை தமிழக அரசு சார்பில் பெற்றுள்ளோம். நிதி அமைச்சருக்கான தகுதி இல்லாத நபரை நிதி அமைச்சராக திமுக நியமித்துள்ளது. தமிழகத்தில் வரி உயர்வுக்கு காரணம் நிதி அமைச்சர் மட்டுமே. இல்லாததை சொல்லி அரசு மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட நிதி அமைச்சர் காரணம்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in