Published : 25 Sep 2022 02:27 PM
Last Updated : 25 Sep 2022 02:27 PM

'வெளிநாட்டு வேலையை விட்டு அரசியலுக்கு வந்ததே நலிந்தோருக்கு உதவத்தான்' - பிடிஆர் பேச்சு

மதுரை நலத்திட்ட விழாவில் பங்கேற்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மதுரை: வெளிநாட்டு வேலையை விட்டு அரசியலுக்கு வந்தது நலிந்தோருக்கு உதவத்தான் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ''அரசியலுக்கு பலர் பல்வேறு காரணங்களுக்காக வந்திருக்கலாம். ஆனால் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து பின்பு அதை வேண்டாம் என்று எண்ணி அரசியலுக்கு வந்ததற்கு காரணம் ஆதரவற்றோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

நான் அமைச்சரான பின்பு இது போன்ற நிகழ்ச்சிகள் எனது தொகுதியில் இதற்கு முன்பாக நடத்தி பல பேருக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறேன். பல பயனாளிகளுக்கு வீட்டுக்கு சென்று நானே பல உபகரணங்களை வழங்கி இருக்கிறேன். இதுவரை எனக்கு வந்த தகவலின் படி 800 பேர் பதிவு செய்து அதில் 200 பேருக்கு அங்கேயே நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது என்றும் மீதமுள்ள 600 பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டும்.உங்களுக்கு இது போன்று நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் எந்த பொறுப்புக்கு போனாலும் இந்த தொகுதி மக்களை மறக்க மாட்டேன். என்னை முதன் முதலில் இதே இடத்தில் வாக்காளர்கள் வாக்களித்து சட்டப்பேரவை உறுப்பினராக ஆக்கினீர்கள். தற்போது மீண்டும் என்னை தேர்ந்தெடுத்து தமிழக முதல்வரின் ஆசியினால் தற்போது அமைச்சராக வாய்ப்பு அளித்த மக்களுக்கு என்றும் செய்நன்றி மறவாதவனாக இருப்பேன், '' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x