Published : 25 Sep 2022 12:40 PM
Last Updated : 25 Sep 2022 12:40 PM

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 4.73 கோடி நிலுவை வழக்குகளால் திணறும் நீதித் துறை: அரியர்ஸ் கமிட்டி அமைக்க யோசனை

பி.எஸ்.அமல்ராஜ்

அகில இந்திய அளவில் 4.73 கோடி நிலுவை வழக்குகளுடன் இந்திய நீதித் துறை திணறி வருகிறது. வழக்குகள் தேக்கத்தை குறைக்க, நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். முன்னாள் நீதிபதிகள் அடங்கிய அரியர்ஸ் கமிட்டியை அதிக அளவில் அமைக்க வேண்டும் என்று சட்டத் துறை வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி உச்ச நீதிமன்றம், 25 உயர்நீதிமன்றங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 7,402 கீழமை நீதிமன்றங்களில் கடந்த ஆகஸ்ட் மாத கணக்கெடுப்பின்படி மொத்தம் 4 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரத்து 530 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் 56,365 சிவில் வழக்குகள், 15,076 கிரிமினல் வழக்குகள் என மொத்தம் 71,441 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 10,491 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பவை.

நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 907 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 10.26 லட்சம் நிலுவை வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.

6.06 லட்சம் வழக்குகளுடன் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 2-ம் இடத்திலும், 5.92 லட்சம் வழக்குகளுடன் பிஹார் உயர் நீதிமன்றம் 3-ம் இடத்திலும், 5.63 லட்சம் வழக்குகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் 4-ம் இடத்திலும் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 5.08 லட்சம் சிவில் வழக்குகள், 54,859 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 4.13 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, கீழமை நீதிமன்றங்களில் 10.93 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மொத்தம் 16 லட்சத்து 56 ஆயிரத்து 539 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இது குறித்து சட்ட வல்லுநர்கள் கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ்: நிலுவை வழக்குகளின் தேக்கத்தை குறைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு பார் கவுன்சிலும் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. ஆனால், 54 நீதிபதிகளே பணியில் உள்ளனர். இந்த இடத்தை நிரப்புவதோடு, அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 100 ஆக உயர்த்த வேண்டும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் ஓய்வு வயதை 65-ல் இருந்து 67 ஆக உயர்த்த வேண்டும். இவ்வாறு வயது வரம்பை உயர்த்தினாலே வழக்குகளின் தேக்கம் கணிசமாக குறைந்துவிடும்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.காஜாமுகைதீன்: சராசரியாக 10 லட்சம் மக்களுக்கு சீனாவில் 300-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் உள்ளனர். அமெரிக்காவில் 150 நீதிபதிகளும், கனடாவில் 85 நீதிபதிகளும் உள்ளனர்.

இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 10 லட்சம் பேருக்குதற்போது 21 நீதிபதிகளே உள்ளனர். ‘யானைப் பசிக்கு சோளப்பொரி’ என்பது போலவே இந்த எண்ணிக்கை உள்ளது.

வழக்குகளின் தேக்கத்தை வெகுவாக குறைக்கவும், குற்றவியல் வழக்குகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் நீதிபதி வி.எஸ்.மாலிமத் கமிட்டியின் பரிந்துரைப்படி லோக்-அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை அதிக அளவில் நடத்த வேண்டும்.

முன்னாள் நீதிபதிகள் அடங்கிய ‘அரியர்ஸ் கமிட்டி’ அதிகம் அமைத்து, நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும். நீதித் துறை கட்டமைப்புக்கு மத்திய,மாநில அரசுகள் அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x