Published : 25 Sep 2022 03:51 AM
Last Updated : 25 Sep 2022 03:51 AM

என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து பாஜகவினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு - தலைமைச் செயலர் அவசர ஆலோசனை

தாம்பரம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் நேற்று விசாரணை மேற்கொண்ட போலீஸார்.

சென்னை: நாடு முழுவதும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை, தாம்பரம், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் நேற்று பாஜக பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாலும், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதாலும் பதற்றம் நிலவுகிறது.

கோவை குனியமுத்தூரில் உள்ள ஞானபுரம் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பரத். பாஜக பிரமுகரான இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பலத்த சப்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பரத் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பக்கவாட்டுப் பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர்கள் தீயை அணைத்தனர்.

மர்ம நபர்கள் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீவைத்து வீசியதும், வராண்டாவில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்து வெடித்துத் தீப்பற்றியதும் தெரியவந்தது. தகவலறிந்து வந்த காவல் துணை ஆணையர் சிலம்பரசன் மற்றும் குனியமுத்தூர் போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, தடயங்களைச் சேகரித்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சீதாராமன்(63). தாம்பரம் பகுதி ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவரான இவரது வீட்டின் வெளியே நேற்று அதிகாலை பலத்த சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சீதாராமன் வெளியே வந்து பார்த்தபோது, அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. வீட்டின் முன்புறம் இருந்த செருப்புகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. தீயை அணைத்த சீதாராமன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு வந்த சிட்லபாக்கம் போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சீதாராமன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகிஇருந்தன. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் பால்ராஜ். பாஜக மேற்கு மாநகரத் தலைவரான இவர், இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதையொட்டி, வீட்டின் அருகே வாகனங்களை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். எனினும், வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வாகனங்களுக்குத் தீவைத்தவர்களைக் கைது செய்யக் கோரி நேற்று காலை திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில், பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்ததால், கட்சியினர் மறியலைக் கைவிட்டனர்.

மருத்துவர் கார்களுக்கு தீவைப்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி நிலைய மருத்துவ அலுவலராகப் பணியாற்றுபவர் மனோஜ்குமார். இவர் பாஜக நிர்வாகிகளுடன் தொடர்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவரது மருத்துவமனை மற்றும் வீடு கேணிக்கரையில் உள்ளது. இந்நிலையில், இவரது மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். மருத்துவமனை காவலாளி, மருத்துவர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை மற்றும் கேணிக்கரை போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கேனில் வைத்திருந்த பெட்ரோலை கார்களில் ஊற்றி தீவைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தன.

இதுகுறித்து எஸ்.பி. தங்கதுரை கூறும்போது, "குற்றவாளிகளைப் பிடிக்க காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் 40 பாஜக மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி, உளவுத் துறை ஏடிஜிபி, கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தலைமைச் செயலர், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

டிஜிபியிடம் பாஜகவினர் மனு

இதற்கிடையில், பாஜக அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், திருப்பதி நாராயணன், செயலர் கராத்தே தியாகராஜன், மாவட்டத் தலைவர் காளிதாஸ், பொதுச் செயலர் சி.ராஜா ஆகியோர் நேற்று உள்துறை முதன்மைச் செயலர் க.பணிந்தீர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரிடம் மனு அளித்தனர்.

பின்னர், கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசுவதுடன், வாகனங்களுக்கு தீவைக்கப்படுகின்றன. கடந்த 3 நாட்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் நிலையில் போலீஸார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. எனவே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், பாஜக, ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்து மதத்தை அவமதித்ததாக ஆ.ராசா மீது 1,549 புகார்கள் அளித்தும், வழக்கு பதிவு செய்யவில்லை. இந்தப் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x