

*
மேட்டுப்பாளையம் நெல்லித்துறையிலிருந்து தொண்டாமுத்தூர் வரை பயன்பெறக்கூடிய பவானி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் இன்னும் சில மாதங்களில் முழுமையாக முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் கோவை மாநகருக்கு சிறுவாணி குடிநீர் வழங்கும் அணை அமைந்துள்ள மலைகளுக்கு கீழே உள்ள, வழியோர கிராமங்களிலும் செயல்படுத்தப்படுவதால் எதிர்காலத்தில் தங்களுக்கு சிறுவாணி நீர் என்பது கேள்விக்குறியாகிவிடுமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, தென்கரை, வேடப்பட்டி, தாளியூர், ஆலந்துறை, பேரூர் ஆகிய 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தைச் சார்ந்த 134 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்துகொடுப்பதற்காக பவானி ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு ரூ.130.46 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்காக வருடாந்திர பராமரிப்புச் செலவாக ரூ.3.91 கோடி வழங்குவதற்கும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் 1.55 லட்சம் மக்களுக்கு தினமும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
சாடிவயல் வரை குழாய்கள்
இதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை அருகே பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க நீரேற்று நிலையம் (பம்ப்பிங் ஸ்டேஷன்) ஒன்றும், அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் குருந்தமலை பகுதியில் சுத்திகரிப்பு நிலையமும், நெல்லித்துறை பவானி ஆற்றிலிருந்து தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, சாடிவயல் வரை சுமார் 70 கிலோமீட்டர் தொலைவுக்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.
வரும் மார்ச் மாதத்தில் இப்பணிகள் முடிவடையும், அதற்குப் பிறகு நெல்லித்துறை பவானி தண்ணீர் குறிப்பிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் என்று இப்பணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.
இதற்காக பவானி நதிக்கரையோரம் அமைக்கப்படும் நீரேற்று நிலையப் பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
யானைகள் புத்துணர்வு முகாம்
இதுகுறித்து, இப்பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் கூறும்போது, “ஆண்டுதோறும் தமிழக அரசின் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறும் இடத்திலேயே, இதற்கான நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாமை, அடுத்த மாதம் நடத்த அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இன்னும் ஓரிரு வாரத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். எனவே, அதற்குள் நீரேற்று நிலையப் பணியை முடிக்குமாறு தெரிவித்துள்ளனர் யானைகள் முகாம் நடத்த இருக்கும் அதிகாரிகள். அதற்காகவே இந்தப் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகிறோம்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் பணி முடிந்துவிடும்” என்று தெரிவித்தனர்.
மேலும், “இப்பணி முடிந்தவுடன், குருந்தமலையில் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தொடங்கப்பட்டுவிடும். அது குறைந்தபட்சம் 5 மாதங்கள் நடைபெறும். அதற்குள் ராட்சத குழாய் பதிக்கும் பணி அனைத்து இடங்களிலும் (இதுவரை 90 சதவீதம் குழாய்கள் பதிக்கும் பணி முடிவடைந்து விட்டதாம்) முடிவுக்கு வந்து விடும்” என்றும் தெரிவிக்கின்றனர் ஒப்பந்த நிறுவனப் பொறியாளர்கள்.
இந்தப் பணிகள் நடக்கும் பகுதிகள் பெரும்பாலும் ஏற்கெனவே சிறுவாணி குடிநீர்த் திட்டம் அமலில் உள்ள பகுதியாகவும் உள்ளன. முக்கியமாக, கோவைக்கு சிறுவாணி குடிநீர் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே வழியோரக் கிராமங்களுக்கும் சிறுவாணி நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முக்கியமாக, கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையும், அதற்கான சுத்திகரிப்பு நிலையமும் அமைந்திருக்கும் மலைகளின் அடிவாரப் பகுதியான சாடிவயலில் ஆரம்பித்து, ஆலாந்துறை, பூலுவபட்டி, தொண்டாமுத்தூர், தாளியூர் போன்ற பல்வேறு கிராமங்களிலேயே இந்த நெல்லித்துறை பவானி நதி குடிநீர்த் திட்டக் குழாய்கள் செல்கின்றன.
மக்களின் சந்தேகம்…
கோடைகாலத்தில் சிறுவாணி அணையில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதால், நகரப் பகுதிகளுக்கே போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
“சிறுவாணி நதியிலும் சரி, கோவைக்கு குடிநீர் வழங்கும் அணையிலும் சரி, கேரள அரசுக்கும், தமிழக அரசுக்கும் ஏற்கெனவே பல பிரச்சினைகள் உள்ளன.
சிறுவாணி தண்ணீர் குறைந்துவிட்டால், வழியோரக் கிராமங்கள் மட்டுமல்ல, கோவை மாநகரில் சிறுவாணி நீர் மட்டுமே இணைப்பில் உள்ள பகுதிகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும்.
எனவே, இந்த புதிய குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், கோவைக்கு சிறுவாணி நீர் கிடைக்காமல் போகும்நிலை உருவாகும். அப்போது, இந்த குழாய்களை, சிறுவாணிக் குழாய்களுடன் இணைத்து, பவானி நீரை விநியோகம் செய்யவும் வாய்ப்புள்ளது” என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இணைப்பு துண்டிக்கப்படாது
இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த குடிநீர்க் குழாய் இணைப்பால் பழைய சிறுவாணி இணைப்பு துண்டிக்கப்படாது. கிராமப்புறத்துக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் தண்ணீரும், நகர்ப்புற மக்களுக்கு 70 லிட்டர் தண்ணீரும் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதனால் இதே பகுதிகளில் உள்ள சிறுவாணிக் குழாய்களில் வழக்கம்போல சிறுவாணி தண்ணீரே வரும். எனினும், சிறுவாணியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழையளவு குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை சிறுவாணி அணை நிரம்பி வழியும். இப்போதெல்லாம் அப்படி நடப்பதே இல்லை. அதிலும், இந்த ஆண்டு கடும் வறட்சி. அதனால் கோடை வரை தாக்குப் பிடிக்க முடியாது. இனியும் சிறுவாணியையே முழுமையாக நம்ப முடியாது என்பதால், தொண்டாமுத்தூர்-பவானி நதிநீர் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அடுத்ததாக, அம்ரூத் திட்டத்தில் பில்லூருக்கு மேலே ரூ.70 கோடி செலவில் 3-வது பில்லூர் குடிநீர்த் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. அது அமையும்போது, கோவை மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளின் தண்ணீர்த் தேவையும் பூர்த்தியாகும்” என்றனர்.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை பவானி ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டு வரும் நீரேற்று நிலையம்.
கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ள ராட்சத குடிநீர்க் குழாய்கள்.
“இந்த புதிய குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், கோவைக்கு சிறுவாணி நீர் கிடைக்காமல் போகும்நிலை உருவாகும். அப்போது, இந்த குழாய்களை, சிறுவாணிக் குழாய்களுடன் இணைத்து, பவானி நீரை விநியோகம் செய்யவும் வாய்ப்புள்ளது”