

சென்னை: பாஜக பிரமுகர்கள் வீடு, அலுவலகங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் மற்றும் ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக ரயில் நிலையங்களில் போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
'சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளுக்கு வரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீஸார் தீவிர சோதனை நடத்தி, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளை, வெடிகுண்டு மற்றும் மர்ம பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்ற அடிப்படையில் போலீஸார் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கவும் ரயில்வே போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, தினமும், மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் ரயில் நிலைய நடைமேடைகள், ரயில்களில் சோதனை மேற்கொள்கின்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே காவல்கண்காணிப்பாளர் அதிவீர பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு ரயில்வே போலீஸாருக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ரயில்களில் வரும் சந்தேகத்துக்கிடமான நபர்களை பிடித்து அவர்களின் உடமைகளை தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறோம். ரயில் பெட்டிகளில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் ஏதும் உள்ளதா என்பதை கண்டறிய மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளன.
அதேபோல சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, விருதுநகர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 356 ரயில்வே போலீஸாரும், சென்னை மாவட்டத்தில் 410 ரயில்வே போலீஸாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இது போன்ற தணிக்கை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.