Published : 25 Sep 2022 04:35 AM
Last Updated : 25 Sep 2022 04:35 AM
கோவையில் நிகழ்ந்த தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை அடுத்து, மாநகரில் காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர காவல்துறையில் உளவுத்துறை எனப்படும் நுண்ணறிவுப் பிரிவு (ஐஎஸ்), சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்ஐசி) ஆகிய இரண்டு முக்கியப் பிரிவுகள் உள்ளன.
இரண்டு பிரிவுகளும் தலா ஓர் உதவி ஆணையர் தலைமையில் இயங்குகின்றன. நுண்ணறிவுப் பிரிவில் 3 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 30-க்கும் மேற்பட்டோரும், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் 2 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டோரும் பணியாற்றுகின்றனர்.
காவல் நிலையங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள், அங்கு நிகழும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு நிகழ்வுகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவை தொடர்பான தகவல்களை முன்னரே சேகரித்து உதவி ஆணையர் மூலம் மாநகர காவல் ஆணையருக்கு தெரியப்படுத்துகின்றனர்.
அதேபோல், காவல் நிலையங்கள் வாரியாக உள்ள நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் மதம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை சேகரித்து உதவி ஆணையர் மூலமாக மாநகர காவல் ஆணையர் கவனத்துக்கு எடுத்துச் செல்கின்றனர்.
தற்போதைய சூழலில், மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்தை மாநகர குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் முருகவேல், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக பார்த்திபன் பணியில் உள்ளார்.
கடந்த 22-ம் தேதி இரவு காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மாநகர் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதைத் தொடர்ந்து நூறடி சாலை, குனியமுத்தூர், கோவைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் இந்து இயக்கங்களின் ஆதரவாளர்கள், நிர்வாகிகளின் வீடுகளை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.
இதைத் தொடர்ந்து நுண்ணறிவுப் பிரிவு, சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த கூடுதல் துணை ஆணையர் முருகவேல், தனக்கு ஒதுக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவை மட்டும் கவனித்துக் கொள்வார்.
சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வந்த பார்த்திபன், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்காநல்லூர் சரக உதவி ஆணையர் எம்.ஜி.அருண் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT