Published : 25 Sep 2022 04:40 AM
Last Updated : 25 Sep 2022 04:40 AM

கோவை மாநகர் முழுவதும் 3,500 போலீஸார் தீவிர கண்காணிப்பு: துப்பாக்கியுடன் கமாண்டோ படையினரும் ரோந்து

கோவை

அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, மாநகர் முழுவதும் 3,500 காவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கியுடன் கமாண்டோ படையினரும் முக்கிய இடங்களில் ரோந்துப்பணி மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாநகரில் மூன்று நாட்களாக கட்சி அலுவலகம், இந்து இயக்க நிர்வாகிகள், ஆதரவாளர்களின் வீடுகள், கடைகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைத்தல் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, முதல் நாளில் 400 பேர் அடங்கிய 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மாநகரில் குவிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாநகரில் பதற்றம் தணியாததால், வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு மாநகர் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகரில் 11 இடங்களில் நிரந்தர சோதனைச் சாவடிகள் உள்ளன. அதுதவிர, 28 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தி காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 1,500 போலீஸார் கோவை மாநகருக்கு வரவழைக்கப்பட்டு நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதுதவிர, துப்பாக்கி ஏந்திய 100 கமாண்டோ படையினரும் முக்கியமான இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக மாநகர் முழுவதும் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x