

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உடற்பயிற்சி பிரிவின் மாநிலச் செயலாளராக இருக்கும் பிரபு என்பவரது வீட்டு பகுதியில், நேற்று முன் தினம் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு தப்பினர்.
இதில் கார் கண்ணாடி உடைந்தது. நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி நிர்வாகிகள், பாஜகவினர் வீடுகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல, திருப்பூர் மாநகர பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டு, ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் இரவு வரை மாநகரில் உள்ள முக்கியமான சாலைகள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் தடுப்புகள் அமைத்து, வாகன சோதனை நடைபெற்றது.
புஷ்பா திரையரங்க வளைவு, மாநகராட்சி சந்திப்பு, தென்னம்பாளையம், வீரபாண்டி, தாராபுரம் சாலை சந்திராபுரம் பிரிவு ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடைபெற்றது.
மாநகரில் போலீஸார் மற்றும் அதிவிரைவுப் படையினர் 300-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.