

கோவை- கோவா இடையே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘ரெட் ஐ’ விமான சேவை மீண்டும் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.
கோவை விமானநிலையத்தில் இருந்து கோவாவுக்கு கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் முதல் முறையாக தனியார் நிறுவனம் சார்பில் விமான சேவை தொடங்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் இயக்கப்பட்டபோதும் இந்த விமான சேவைக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது.
கரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்தால் விமான சேவைகளை பல நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்தன. அதன் அடிப்படையில் கோவை -கோவா இடையே இயக்கப்பட்டுவந்த விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் அக்டோபர் 30-ம் தேதி முதல் தினமும் விமான சேவை வழங்கப்பட உள்ளது. 170 பேர் பயணிக்க உதவும் ‘ஏர்பஸ் ஏ 320’ ரகத்தை சேர்ந்த விமானம் இந்த சேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
தினமும் நள்ளிரவு 11.05 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் விமானம் 12.30 மணிக்கு கோவா சென்றடையும்.மீண்டும் அதிகாலை 1 மணிக்கு கோவாவில் இருந்து புறப்படும் விமானம் 2.30 மணிக்கு கோவை வந்தடையும்.
‘ரெட் ஐ’ விமான சேவை குறித்துவிமானநிலைய அதிகாரிகள் கூறும்போது, “நள்ளிரவு நேரத்தில் தொடங்கி அதிகாலை வரை விமான சேவை வழங்கப்படுவதால் விமானி,பணிப்பெண்கள் உட்பட விமானத்தில் பயணம் செய்பவர்களில் பலர் சிவந்த கண்களுடன் காணப்படுவர்.
இதனால் இச்சேவைக்கு‘ரெட் ஐ’ என பெயரிடப்பட்டுள்ளது” என்றனர். தனியார் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறும்போது, “கோவை விமானநிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் உள்நாட்டின் அனைத்து விமான சேவைகளும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வழங்கப்படுகின்றன.
இந்த பணிகள் காரணமாக செப்டம்பர் மாதம் வரை மட்டுமே நள்ளிரவு விமான சேவை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் சீரமைப்பு பணி குறித்து விமானநிலைய நிர்வாகம் தெரிவிக்கும் அறிவிப்பை பொறுத்து கோவை கோவா இடையே மீண்டும் தொடங்கப்பட உள்ள விமான சேவை நேரம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் காரணமாகவே தற்போது நள்ளிரவு மற்றும் அதிகாலை விமான சேவை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது” என்றனர்.