

தமிழகத்தில் திமுக நிர்வாகரீதியிலான 72 மாவட்டங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மனுதாக்கல் கடந்த 22-ம்தேதி தொடங்கியது. முதல் நாளில் 19 மாவட்டங்களுக்கும், 2-வது நாளில் 21 மாவட்டங்களுக்கும் மனுக்கள் பெறப்பட்டன.
3-வது நாளான நேற்று புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை), நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய ஆகிய 16 மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது.
இதில் அமைச்சர்கள், தற்போதைய மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதனால், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
இந்நிலையில், கடைசி நாளான இன்று, வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை), வேலூர் மத்திய, வேலூர் மேற்கு (திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய,
சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்கள் என 16 மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறவுள்ளது.
போட்டியிருந்தால் 72 மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெறும். இல்லாத பட்சத்தில் விண்ணப்பித்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். பெரும்பாலும் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.