

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் இதுவரை 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 600 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக ராணுவ துணை இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் சாஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கடந்த 4-ம் தேதி தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறுது. முகாம் செயல்பாடு குறித்து திங்கள்கிழமை துணை இயக்குநர் ஜெனரல் சாஜன் கூறியதாவது:
ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இதுவரை 12 ஆயிரம் பேர் முகாமில் பங்கேற்றனர். உடல் தகுதி சோதனை, மருத்துவப் பரிசோதனைகள் என அனைத்துக் கட்டத்திலும் இதுவரை 600 இளைஞர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் வெளிப்படையாக நடத்தப்படு கிறது. இதில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. ஆந்திர ராணுவ அதிகாரிகள் தான் முகாமில் பங்கேற்றுள்ளனர். முகாமில் பங்கேற்கும் இளைஞர் கள் இடைத்தரகர்களை நம்பி பணம் செலுத்த வேண்டாம். நேரடியாக முகாமில் கலந்து கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வும் ஒளிவு மறைவின்றி நடத்தப்படுகிறது. அனைவரும் இங்குள்ள செயல்பாடுகளை பார்க்கலாம்.
8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு:
முகாமில் பங்கேற்கும் இளை ஞர்களின் சான்றிதழ் அனைத்தும் உண்மையானது தானா என உறுதி செய்ய அவர்களது மாவட்டங் களைச் சேர்ந்த அதிகாரிகள் சரி பார்க்கின்றனர். இறுதி நேர்காண லின் போது அவர்களது சான்றிதழ் கல்வித்துறை மூலம் சோதனை செய்யப்படும்.
இதனால் 8 மாவட்ட வருவாய்த் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது முகாம் நடைபெறுகிறது. ஆனால், குறைவான அளவிலேயே புதுவை இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
ஆயிரக்கணக்கில் இளைஞர் கள் குவிவதால் அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் சற்று கடுமையாக நடக்க வேண்டியுள் ளது. இவ்வாறு சாஜன் குறிப்பிட் டார். பேட்டியின் போது பிரிகேடியர் ராஜகோபால் உடனிருந்தார்.