

தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதம் அல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயசித்ரா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
குடும்பப் பிரச்சினையால் நானும், கணவரும் பிரிந்து வாழ்கிறோம். என் மகன் தந்தையுடன் இருக்கிறான். மகனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் குழந்தை அவரது தந்தையிடம்தான் உள்ளது. தந்தையை 3-வது நபர் எனக் கூற முடியாது.
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்டவிரோதம் அல்ல. எனவே, மனுதாரரின் மனுவை ஆள்கொணர்வு மனுவாக கருதி விசாரிக்க முடியாது.
மனுதாரர் விரும்பினால் அவரது மகனை நேரில் சென்று பார்க்கலாம். அதை தடுத்தால் உரிய நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் பெறலாம் என உத்தரவிட்டனர்.