Last Updated : 19 Nov, 2016 09:07 AM

 

Published : 19 Nov 2016 09:07 AM
Last Updated : 19 Nov 2016 09:07 AM

அரசியல் காரணத்துக்காக நதிகள் இணைப்பு நின்றுவிட கூடாது - திமுக தலைமை செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

30 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்கான வெற்றி என பெருமிதம்

நதிகள் இணைப்புக்காக சிறப்புக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது தனது 30 ஆண்டுகால சட்டப் போராட்டத் துக்கு கிடைத்த வெற்றி. அரசியல் காரணங்களுக்காக இது நின்றுவிடக் கூடாது என்று மூத்த வழக்கறிஞரும், திமுக தலைமை செய்தி தொடர்பாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அளித்த சிறப்பு பேட்டி:

நதி நீர் இணைப்பை வலியுறுத்தி 33 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் சென்றவர் நீங்கள். அதன் பின்னணி என்ன?

என் அரசியல் வாழ்க்கை காமராஜ ருடன் 70-களில் ஆரம்பித்தது. அப்போது, எங்கள் நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி இருந்தது. பலரும் கங்கை - காவிரி இணைப்பை பேசினார்களே தவிர, தமிழகத்தைச் சுற்றியுள்ள சின்ன சின்ன ஆறுகள், குறிப்பாக கேரளாவில் இருக்கும் 80-க்கும் அதிகமான ஆறுகளைப் பற்றி யாரும் பேசவில்லை. அவற்றில் இருந்து சுமார் 1,500 டிஎம்சி தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலந்தது. இது மேட்டூர் அணையின் கொள்ளளவைவிட பல மடங்கு அதிகம். இதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நதிகளை இணைக்க மனு தாக்கல் செய்தேன்.

நதி நீர் இணைப்புக்கான தேவை, அதன் பின்னணியில் உள்ள பிரச்சினைகள் என்ன?

அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங் களில் நாடுகளுக்கு இடையேகூட நதி நீரை பங்கிட்டுக் கொள்கின்றனர். இந்தியாவில்தான் நதிகள் பங்கீட்டில் சிக்கல் நிலவுகிறது. நதிகள் உற்பத்தி யாகும் இடத்தைப் பொறுத்தே இங்கு நதிகளை சொந்தம் கொண்டாடுகின்றனர். காவிரி, முல்லை பெரியாற்றைத் தாண்டி, நெய்யாறு (இடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டன), செண்பகவல்லி, அடவி நயினாறு, உள்ளாறு, அழகர் அணை ஆகியவை தமிழகத்துக்கு உரிமை யுள்ள நீர்வளங்கள். அவற்றை ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்த கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது. ஆழியாறு - பரம்பிக்குளம், பாம்பாறு, அச்சன்கோவில், பம்பை என 20-க்கும் அதிகமான சிறு நதிகளின் நீரைப் பங்கிடு வதிலும் இதே நிலை. நதிகளை தேசிய மயமாக்குவதும், இணைப்பதும்தான் இந்த பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு.

உங்கள் மனு மீதான விசாரணையின் போக்கு ஆரம்பத்தில் எப்படி இருந்தது?

‘நதிகளை தேசியமயமாக்கி இணைக்க வேண்டும். கேரளாவின் பெரும்பாலான நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதி தமிழகத்தில் உள்ளது. எனவே, அவற்றை வைப்பாறு உள்ளிட்ட தமிழக நதிகளுடன் இணைக்க வேண்டும்’ என்று என் மனுவில் கூறியிருந்தேன். அது இரண்டொரு முறை தள்ளுபடியானது. ஆனாலும், தொடர்ந்து போராடினேன். இந்த வழக்குக்காக நூற்றுக்கணக்கான முறை சென்னைக்கும் டெல்லிக்கும் சொந்த செலவில் விமானத்தில் பறந்தேன். காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பியும், மூத்த வழக்கறிஞருமான எல்.வி.சிங்வி எனக்காக இலவசமாகவே வாதாடினார். ஆரம்பக்கட்டம் இப்படித் தான் இருந்தது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருந்தபோது மத்தியில் பல்வேறு அரசுகள் ஆட்சியில் இருந்தன. அதுபற்றி..?

நான் மனு தாக்கல் செய்தபோது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அவருக்கு இயற்கையிலேயே நதி நீர் இணைப்பில் ஈடுபாடு உண்டு. வி.பி.சிங், நரசிம்மராவ், தேவகவுடா ஆகிய 3 பிரதமர்களை நேரில் சந்தித்து வலியுறுத் தினேன். என் கருத்தை வி.பி.சிங், நரசிம்ம ராவ் ஏற்றுக்கொண்டனர். தேவகவுடா வுடன் கசப்பான அனுபவம் ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற நடுவர் சித்தரஞ்சன் கோஸை தமிழகம் கறைபடுத்திவிட்ட தால் அவரை நீக்க வேண்டும் என்று தேவ கவுடா வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் தமிழகம், கேரளா, புதுச் சேரியை எதிர்தரப்பு வாதிகளாக சேர்த் தார். அவர் பின்னாளில் பிரதமரான போது, ‘மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர், பிரதமராகத் தொடருவதா?’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதனால், நதிகள் இணைப்பு பற்றிய என் கோரிக்கையை அவர் உதாசீனப்படுத்தினார்.

நதிகள் இணைப்புக்கான உங்கள் போராட் டத்தில் நீங்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளின் பங்களிப்புகள் என்ன?

நான் எடுத்தது தனிப்பட்ட முயற்சி என்ப தால், நான் சார்ந்த கட்சிகளை தொந்தரவு செய்யவில்லை. சொந்த செலவில்தான் டெல்லிக்கும் சென்னைக்கும் விமானம் மூலம் பலமுறை பறந்தேன். 2012-ல் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோது, நதி நீர் இணைப்புக்காக குரல் கொடுத்தவர் என்ற முறையில் ரஜினிகாந்துக்கு ஒரே ஒருமுறை கடிதம் எழுதினேன். அதுவும் பொருளாதார உதவிக்காக அல்ல. ஏதாவது விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என்றுதான் எழுதினேன். அதற்கு இதுவரை பதில் இல்லை.

நதி நீர் இணைப்பு தொடர்பான தீர்ப்பு வெளியானபோது, மீண்டும் திமுகவுக்கு வந்திருந்தீர்கள். அப்போது ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடு எப்படி இருந்தது?

நதிகளை இணைக்க குழு அமைக்க வேண்டும் என்று 2012 பிப்ரவரி 27-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அப்போது நீர்வளத் துறை அமைச்சராக ஹரீஷ் ராவத் இருந்தார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு அவரைச் சந்தித்து வலியுறுத்தினேன். அவர் நடைமுறைப்படுத்தவில்லை இதையடுத்து, நானும், அப்போதைய திமுக எம்.பி. தங்கவேலுவும் மீண்டும் அவரை சந்தித்தோம். நதி நீர் இணைப்புக்கான உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று அவரிடம் கூறினேன். அதன்பிறகே, நதி நீர் இணைப்புக்கான குழுவை ராவத் அமைத்தார். அந்தக் குழுவும் செயல்படாத குழுவாகவே தொடர்ந்தது. இதற்கிடையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

2014-ல் அமைந்த பாஜக அரசு நதி நீர் இணைப்பு பிரச்சினையை எப்படி கையாளுகிறது?

நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து இதுபற்றி பேசினேன். இதற்காக உடனே குழு அமைப்போம் என்றார். சொன்னதுபோல, அடுத்த நாளே குழு அமைக்கப்பட்டது. தற்போது சிறப்புக் குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இது வெறும் அறிவிப்பாக இருக்கக் கூடாது. முழு மூச்சுடன் செயல் வடிவத்தை எட்ட வேண்டும். நதிகள் இணைய 40 ஆண்டுகள்கூட ஆகட்டும். ஆனால், அரசியல் காரணங்களுக்காக இது நின்றுவிடக்கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x