Published : 24 Sep 2022 11:14 AM
Last Updated : 24 Sep 2022 11:14 AM

சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிடுக: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கையை (Chennai Climate Action Plan - CCAP) எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் ஆங்கிலத்தில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி, நாளை மறுநாள் செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் அதன் மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையை தமிழில் வெளியிடாமல், மிகக்குறைந்த கால அவகாசத்தில் கருத்துகளைக் கோருவது நியாயமற்றதாகும்.

எனவே சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து இரு மாதம் காலக்கெடு வழங்க வேண்டும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விளம்பரம் செய்ததைப் போன்று இதற்கும் விளம்பரம் செய்ய வேண்டும். சென்னையில் உள்ள பல்வேறு தரப்பினரிடமும், சென்னை காலநிலை மாற்ற செயல் திட்டத்தில் அவரவர் தொடர்புடைய பகுதிகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து, அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.

சென்னை மாநகரின் 200 வார்டுகளிலும் நேரடியான விளக்கக் கூட்டங்களை நடத்தி, மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். சென்னை நகரில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், விளக்கக் கூட்டங்களை நடத்தி, கருத்துகளை கேட்க வேண்டும். சென்னை நகரில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் மற்றும் அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களுடன் சிறப்பு கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். குடிசைப்பகுதி மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மீனவர்கள் உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்படுவோருடன் விரிவாக கலந்தாலோசிக்க வேண்டும். மேற்கண்ட நடைமுறைகளை விரிவாக மேற்கொள்ளும் வகையில், கருத்துக் கேட்புக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும்; மக்களின் கருத்துகளை உள்ளடக்கிய சென்னை மாநகருக்கான காலநிலை செயல்திட்டத்தை உருவாக்கி முழுமையாக செயல்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x