திருப்பரங்குன்றம் மலையில் இயற்கை சூழலுக்கு ஆபத்து: மேம்பாட்டுத் திட்டங்களால் மலையடிவாரம் வெப்பமடைவதாக சர்ச்சை

திருப்பரங்குன்றம் மலையில் இயற்கை சூழலுக்கு ஆபத்து: மேம்பாட்டுத் திட்டங்களால் மலையடிவாரம் வெப்பமடைவதாக சர்ச்சை
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களால், அப் பகுதியின் இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சூற்றுச் சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரி வித்துள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம், முக்கிய ஆன்மிக தலமாக திகழ்கிறது. இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று கிரிவலத்துக்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. இதற்கென தமிழக அரசு ரூ.2 கோடி வரை ஒதுக்கியுள்ளது.

இயற்கை வளத்தை மேம்படுத்த உதவாத இத்திட்டங்களால், திருப்பரங்குன்றம் மலையின் இயற்கை சுழல் பாதிக்கப்படுவதாகவும், மலைப்பகுதியில் வெப்பம் அதிகரித்து வருவதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் இளம்முருகன் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கெனவே சூரிய வெளிச்சம்பட்டு பிரதிபலிப்பதால் மலையும், மலை அடிவாரப் பகுதியிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது.

தற்போது பக்தர்களின் வசதிக்காக மலையின் இயற்கை சூழலை கெடுக்கும் வகையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்றுள்ளது. தார்ச்சாலையை மேம்படுத்தவுள்ளனர். மலையை சுற்றி உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்து வருகின்றனர். இந்த விளக்குகள் இரவு முழுவதும் வெப்பத்தை உமிழ்வதால், இரவிலும் மலைப்பகுதி அதிக வெப்பமடைகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருப்பரங்குன்றம் மலையடிவாரம் வனப்பகுதியாக இருந்தது. அரிய வகை வெள்ளை நிற மயில்கள், பல்வகை வனவிலங்குகள் இருந்தன. தற்போது திருப்பரங்குன்றத்திற்கே உரித்தான மயில்கள் இனம் அழிந்துவிட்டது.

கிரிவலப் பாதையில் சாலையின் இருபுறமும் நடைமேடை அமைக்கும் திட்டமும் இருக்கிறது. எதிர்காலத்தில் ஏற்படும் பின்விளைவுகளை யோசிக்காமல் தேவையில்லாமல் நிதி செலவிடப்படுகிறது.

இந்த இடத்தை வனத்துறையிடம் ஒப்படைத்தால், மரக்கன்றுகளை நட்டு உயிரியல் பூங்கா அமைக்கலாம். ஆனால், வனத்துறை கேட்கும் நிலத்தை இந்து அறநிலையத்துறை வழங்காமல் இருப்பதால், இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றார்.

இதுகுறித்து கோயில் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “முன்பு திருப்பரங்குன்றம் மலை மட்டும் இருந்தது. குடியிருப்புகளும் குறைவாக இருந்தது. பக்தர்களின் வருகையும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கும்.

தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு தகுந்தவாறு மலை அடிவாரப் பகுதியை மேம்படுத்தாவிட்டால் திறந்தவெளியை கழிப்பிடமாக் கிவிடுவார்கள். இரவில் தெருவிளக்கு இல்லாவிட்டால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு ஏற்படும். தார்ச்சாலை ஏற்கெனவே மலையைச் சுற்றி அமைக் கப்பட்டதுதான். புதிதாக சாலை எதுவும் அமைக்கப்படவில்லை. பேவர் பிளாக் கற்களை பதிப்பதால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பில்லை” என்றார்.

முன்பு பசுமையான காடுகள் இருந்த திருப்பரங்குன்றத்தின் இப்பகுதி, தற்போது குடியிருப்புகள் அதிகரித்து ‘கான்கிரீட்’ காடுகளாக மாறி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in