

கோவை/ பொள்ளாச்சி/ திருப்பூர்: கோவையில் இந்து அமைப்புகளின் ஆதரவாளர்களது கடைகள், வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சு, தீவைப்புசம்பவங்கள் நடந்தன. இச்சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பதற்றத்தை தணிக்க போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கோவை காந்திபுரம் விகேகேமேனன் சாலையில் உள்ள பாஜகமாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.2-வது நாளாக நேற்றும் கோவை மாவட்டத்தில் சில இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.
ரத்தினபுரி மண்டல் பாஜக தலைவர் மோகன். இவர் காந்திபுரம் 100 அடி சாலையில் வெல்டிங் பொருட்கள் விற்கும் கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பெட்ரோல் நிரப்பிய மதுபாட்டில், கடையின் கதவு மீது பட்டு கீழே விழுந்து கிடந்தது. கடையை நாசமாக்கும் நோக்கில், மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி மர்ம நபர்கள் வீசியதும், கதவு மீது பட்டதில் திரிஅணைந்ததால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.
இந்து அமைப்புகளின் ஆதரவாளர்களான சச்சின், தனபாலன் ஆகியோர் மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் அடுத்தடுத்து பிளைவுட் கடை நடத்துகின்றனர். இவர்கள் நேற்று கடையை திறக்கவந்தபோது, கடைகளின் ஜன்னல்கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. மர்ம நபர்கள் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி திரியை பற்றவைத்து உள்ளே வீசியுள்ளனர். தீவேகமாக பரவுவதற்காக பிளாஸ்டிக் கவரில் பெட்ரோலை நிரப்பியும் வீசியுள்ளனர். இதில் தீப்பற்றியதில் பலகைகள் சேதமடைந்தன.
குனியமுத்தூரில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான தியாகு, தனது வீட்டு முன்புநிறுத்தியிருந்த கார் மீது மர்ம நபர்கள் நேற்று மதியம் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். பொள்ளாச்சி குமரன் நகரைசேர்ந்த பாஜக உறுப்பினர் சரவணகுமார், தனது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடி நேற்று அதிகாலை உடைக்கப்பட்டிருந்தது.
இதேபோல, பொள்ளாச்சி குமரன் நகரில் கோவை தெற்கு மாவட்டபாஜக அமைப்புசாரா பிரிவின் மாவட்டச் செயலாளர் பொன்ராஜின் கார் கண்ணாடி, அதே பகுதியில்இந்து முன்னணி உறுப்பினர் சிவக்குமாரின் ஆட்டோ கண்ணாடியும் அடித்து உடைக்கப்பட்டிருந்தன.
திருப்பூர் ராக்கியாபாளையம் அடுத்த ஜெய் நகரில் ஆர்எஸ்எஸ் உடற்பயிற்சி பிரிவு மாநில செயலாளர் பிரபுவின் வீடு மீது, இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள் கற்களை வீசிவிட்டு தப்பினர். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பதற்றத்தை தணிக்க மாநகர காவல் துறை சார்பில் காந்திபுரத்தில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
ஈரோடு மூலப்பாளையத்தில் மாவட்ட பாஜக இளைஞர் அணி முன்னாள் செயலாளர் தட்சிணாமூர்த்தியின் பர்னிச்சர் கடை மீது நேற்றுமுன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், மேஜை எரிந்தது. இதனால், அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.