சொத்துக் குவித்தோர் பற்றிய தகவலை அரசுக்கு சொல்வது எப்படி?

சொத்துக் குவித்தோர் பற்றிய தகவலை அரசுக்கு சொல்வது எப்படி?
Updated on
3 min read

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டு களை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ‘தி இந்து உங்கள் குரலில்’ பொதுமக்கள் பதிவு செய்திருந்த சந்தேகங்களுக்கு தமிழ்நாடு முதன்மை வருமான வரித் துறை ஆணையர் (ஓய்வு) எஸ்.செந்தாமரைக் கண்ணன் நேற்று அளித்த பதில்களின் தொடர்ச்சி இங்கே..

நான் என் மனைவியின் நகையை அடகு வைத்து ரூ.3 லட்சம் நகைக் கடன் வாங்கியுள்ளேன். இப்போது முழு கடனையும் செலுத்தி நகையை திருப்பினால் பிரச்சினை வருமா?

- ஜியாவுதீன், திண்டுக்கல்

உங்களுக்கு ரூ.3 லட்சம் எப்படி வந்தது என்பதற்கான ஆதாரம் தேவை. நண்பர்கள் யாராவது தந்தது என்றால் அதை காசோலையாக பெற்று வங்கியில் மாற்றுங்கள். ஒருவேளை, இந்தப் பணம் குறித்து உங்கள் நண்பரிடம் கேள்வி எழுப்பும்போது, அவர் உங்களுக்கு பணம் தரவில்லை என்று மறுத்தால் உங்க ளுக்கு பிரச்சினை. காசோலையாக இருந்தால் சிக்கல் இல்லை.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த் திருப்பவர்கள் பற்றி அரசுக்கு தகவல் தெரிவிப்பது எப்படி?

- ஆறுமுகம், கோவில்பட்டி

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரி புலனாய்வுப் பிரிவு அலுவலகம் இருக்கிறது. இங்கு நேரில் சென்று புகார் தெரிவிக்கலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். போகிறபோக்கில் தெளித்து விட்டுப் போகும் புகார்களையோ ஆதாரம் ஏதுமில்லாமல் பொறாமையில் பொங்கி வெடிக்கும் புகார்களையோ ஏற்கமாட்டார்கள். சம்பந்தப்பட்ட நபரின் உடன் வசிக்கும் உற வினர்கள், பணியாளர்கள் தரும் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். பெரும்பாலும் பெரிய அளவிலான புகார்களை மட்டுமே விசா ரணைக்கு எடுப்பார்கள். தகவல் உண்மையாக இருந்தால் தகவல் தருபவருக்கு ரிவார்டும் உண்டு.

நிலம் வாங்குவதற்காக 3 முறை வங்கியில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் நகைக் கடன் வாங்கினேன். நிலத்தின் உரிமையாளர், செல்லாத பணத்தை வாங்க மறுப்பதால் இப்போது நிலம் வாங்க முடியவில்லை. அந்தப் பணத்தை எப்படி டெபாசிட் செய்வது?.

- பத்ரிநாதன், நெய்வேலி

வங்கியில் நீங்கள் பெற்ற பணத்தை அதே வங்கியிலேயே செலுத்தி அதற்குப் பதிலாக, செல்லும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு வழி இருக்கிறது.

அரசுப் பள்ளி ஆசிரியரான நான் வருமான வரி செலுத்துகிறேன். வங்கியில் உள்ள எனது வீட்டுக் கடன் ரூ.15 லட்சத்தை தற்போது அடைத்தால் பிரச்சினை வருமா?

- பாபு

உங்களுக்கு ரூ.15 லட்சம் மொத்தமாக எப்படி வந்தது என்ற கேள்வி வரும். அதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் ஏற்கும்படியாக இல்லாவிட்டால் சிக்கலாகி விடும். அதற்குப் பதிலாக நீங்கள் மாதத் தவணையாகவே உங்களது கடனை செலுத்திவிடலாமே.

துபாயில் பணிபுரியும் எனது நண்பர் என்.ஆர்.ஐ. கணக்கில் பணம் அனுப்பி வந்தார். வீடு கட்டுவதற்காக ரூ.10 லட்சத்தை எடுத்து அவரது தாய் கையில் வைத்திருந்தார். தற் போது கணக்கு காண்பித்து அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாமா?

- கமருதீன், சேலம்

எற்கெனவே எடுத்த பணத்தை வேறெதற்கும் முதலீடோ, செலவோ செய்யாதபட்சத்தில் தாராள மாக செலுத்தலாம். முன்பு எடுத்த பணத்தை வேறெதுக்காவது கொடுத்துவிட்டு இப்போது வேறு யாருடைய பணத்தையாவது நீங்கள் இந்த கணக்கில் போட்டால் சிக்கல் வரும்.

எனது ஆண்டு வருமானம் ரூ.13 லட்சம். ரூ.5 லட்சம் வங்கியில் நிரந்தர வைப்பு வைத்துள் ளேன். வரி கட்டுகிறேன். சேமித்த பணத்தில் ரூ.15 லட்சத்தை கடன் கொடுத்துள்ளேன். அதை வசூல் செய்து வங்கியில் செலுத்தலாமா?

- முத்துகிருஷ்ணன், பெரம்பூர்

நீங்கள் கடன் கொடுத்த பணத்துக்காக கிடைத்த வட்டியும் சேர்த்துத்தான் ரூ.15 லட்சம் என்றால் வட்டிக்கு மட்டும் நீங்கள் வரி கட்ட வேண்டி இருக்கும்.

அரசு ஊழியரான எனக்கு வீடு வாங்க வங்கியில் கடன் தருவதாகக் கூறுகின்ற னர். இப்போது கடனை வாங்கி வீடு வாங்கலாமா?

- மேரி, சென்னை

தாராளமாக வாங்கலாம். ரியல் எஸ்டேட் சந்தையில் சரிவு ஏற்பட்டிருப்பதால் இப்போது வீடு வாங்குவது புத்திசாலித்தனமான நடவடிக்கையே. மேலும், வீடு வாங்குவதற்கு வருமான வரி சட்டம் பல வரிச் சலுகைகளையும் வழக்கமான நடைமுறையில் வைத்திருக்கிறது.

தனியார் நிறுவன ஊழியரான நான் அலுவலகத்தில் தற்போது ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். அதை எனது வங்கிக் கணக்கில் செலுத்தலாமா?

- சரவணன், சென்னை

கடனாக வந்த பணம் காசோலையாக இருந்தால் பிரச்சினை இல்லை. அப்படி இல்லாமல், ரொக்கமாக வாங்கி இருந்தால் அது கறுப்புப் பணமாக கருதவும் வாய்ப்பு இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை தனது ஊழியர்களுக்குக் கடனாகவும் சம்பள முன்பணமாகவும் தருவ தாக தகவல்கள் வருவதால் நீங்கள் வங்கியில் செலுத்தும் பணத்தின் மீது சந்தேகங்கள் வராத வகையில் ஆவணங்களை வைத்துக்கொள்வது நல்லது.

என்னுடைய மாத வருமானம் ரூ.10 ஆயிரம். இதுவரை நான் சேமித்து வைத்துள்ள ரூ.5 லட்சத்தை வங்கியில் செலுத்தி அதற்கு வருமான வரியும் செலுத்தலாம் என நினைக்கிறேன். இப்போது முடியுமா?

- ஜேம்ஸ், சுரண்டை

பத்தாயிரம் சம்பாதிக்கும் உங்களுக்கு திடீரென ரூ.5 லட்சம் வந்தது எப்படி என்று கேள்வி வரும். அதற்குப் பதிலாக 25 ஆயிரம் ரூபாய் மட்டும் வரி கட்டிவிட்டு உங்களது பணத்தை பயமில்லாமல் வங்கியில் செலுத்தலாம். நீங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தால் மட்டுமே அபராதம் வரும்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன். வரி ஏய்ப்பு செய்திருந்தால் 200 சதவீதம் அபராதம் என நிதித் துறை செயலர் அறிவித்திருக்கிறார். உண்மையில் அப்படி எல்லாம் அவ்வளவு சுலபமாக அபராதம் விதித்துவிட முடியாது.

ஒருவர் வேண்டுமென்றே தனது வருமானத்தை குறைத்துக் காட்டி இருக்கிறார் என்று வருமான வரி அதிகாரி நிரூபித்தால் மட்டுமே இவ்வளவு அபராதம் விதிக்க முடியும். ஒருவர் தவறுதலாக தனது வருமானத்தை குறைத்துக் காட்டி இருந்தால் அதற்கு 50 சதவீதம் மட்டுமே அபராதம் விதிக்க முடியும். வருமான வரித் துறையினரால் பல சமயங்களில் இவைகளை அப்படி நிரூபிக்க முடிவதில்லை. எனவே, அப்படி அபராதம் விதித்தாலும் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பு பெற முடியும். எனவே, இப்போது வரி கட்ட போனால் அபராதம் போடு வார்களோ என யாரும் அஞ்சத் தேவையில்லை.

நைஜீரியாவில் உள்ள எங்கள் உறவினர் ரூ.6 ஆயிரம் இந்திய பணம் வைத்துள்ளார். அடுத்த 6 மாதத்துக்கு அவர் இந்தியா வர வாய்ப்பு இல்லை. அந்தப் பணத்தை மாற்ற ஏதேனும் வழி உண்டா?

- பெயர் குறிப்பிடாத வாசகர்

நைஜீரியாவில் இந்திய வங்கிக் கிளைகள் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள். அல்லது அங்கு உள்ள இந்தியத் தூதரகம் சென்று விசாரித்து பார்க்கச் சொல்லுங்கள். அரசின் இப்போதைய அறிவிப்பின்படி, ஜனவரி முதல் தேதியில் இருந்து குறிப்பிட்ட ரிசர்வ் வங்கிக் கிளைகளில் குறிப்பிட்ட காலம் வரை, பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். எனினும் எவ்வளவு காலம் என்ற தெளிவு இல்லை. அந்த குறிப்பிட்ட காலத்துக்குள் உங்களது உறவினர் இங்கு வந்துவிட்டால் மாற்றிக்கொள்ளலாம்.

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in