

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையின் ஷட்டரை சீரமைக்கும் பணி நவம்பர் முதல் வாரத்தில் முடிவடையும். கான்கிரீட் தூணுக்கு பதிலாக 34.5 டன் எடை கொண்ட இரும்பு தூண் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரம்பிக்குளம் அணையிலிருந்து உடைந்த மதகு மூலமாக வேகமாக தண்ணீர் வெளியேறி வருவதால், நேற்று காலை 9 மணி நிலவரப்படி 60.70 அடியாக அணையின் நீர்மட்டம் இருந்தது. பரம்பிக்குளம் அணையிலிருந்து சுரங்கம் மூலமாக தூணக்கடவு அணைக்கு விநாடிக்கு 1200 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. சேதமடைந்த மதகு வழியாக விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. சோலையாறு அணையிலிருந்து பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
சேதமடைந்த மதகு பகுதியை சீரமைத்து புதிய ஷட்டர் அமைக்கும் பணி மேற்கொள்வது குறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தியாளரிடம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, "சேதமடைந்த மதகு பகுதியில் புதிய ஷட்டர் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட ஆய்வு மேற்கொள்ள நீர்வளத் துறையின் இயக்குதல் மற்றும் பேணுதல் பிரிவின் தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில், இயந்திரவியல் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவினர், சென்னையில் இருந்து வந்து நேற்று முன்தினம் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
சேதமடைந்த மதகு பகுதியிலுள்ள ஷட்டர் காடி மற்றும் சங்கிலி, மின்மோட்டார்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். உடைந்த கான்கிரீட் தூண் சுமார் 240 அடி ஆழத்தில் அணையின் அடித்தளத்தில் தண்ணீருக்கு அடியில் கிடக்கிறது. பரம்பிக்குளம் அணை 72 அடி உயரம் கொண்டது. அணையில் 45 அடி உயரத்துக்கு கான்கிரீட் அமைக்கப்பட்டு, தண்ணீர் தேக்கிவைக்கப்படுகிறது. அதற்கு மேல் 27 அடி உயரத்துக்கு ஷட்டர் மூலமாக தண்ணீர் தேக்கப்படுகிறது. சேதமடைந்த மதகின் சமநிலைப்படுத்தும் 34.5 டன் எடை கொண்ட கான்கிரீட் தூணுக்கு பதிலாக, அதே எடையும் 42 அடி நீளமும் கொண்ட இரும்பாலான தூண் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 42 அடி நீளமும், 27 அடி உயரமும் 34.5 டன் எடையும் கொண்ட இரும்பு ஷட்டர், 4 பகுதிகளாக திருச்சியிலுள்ள தனியார் பணிமனையில் தயார் செய்யப்பட்டு, அணைப் பகுதிக்கு கொண்டுவரப்படும். இந்த 4 பகுதிகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து அணையில் பொருத்தப்படும். ஷட்டரின் 4 பகுதிகளையும் இணைக்கும் பணி மட்டும் 15 நாட்கள் நடைபெறும். ஷட்டர் மட்டத்துக்கு தண்ணீர் வடிய ஒரு வார காலம் ஆகும் என்பதால், நவம்பர் முதல் வாரத்தில் பணிகள் முடியும்" என்றனர்.