

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நல்லச் சந்தை முடங்கி, கள்ளச் சந்தை அமோகமாக நடைபெறுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
பணப்புழக்கம் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர்-31 வரை பயன்படுத்த அனுமதிக்க வேண் டும். வங்கிகளுக்குப் போதுமான பணத்தை அனுப்ப வேண்டும் என் பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
சென்னை ஆலந்தூர் அருகே நங்கநல்லூரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்பகுதியில் வங்கி, ஏடிஎம் மையங்களில் நின்றவர்களிடம் துண்டுப் பிரசுரங்களையும், குடிநீர் பாட்டிலையும் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ க.பீம்ராவ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏ.லதா, ஆலந்தூர் தொகுதி செயலாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் ராம கிருஷ்ணன் கூறியதாவது:
கறுப்புப் பணம், ஊழல், பயங்கரவாதம், கள்ளப்பணத்தை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த திட்டம் நிறைவேறாது. காரணம், 6 சதவீத பணம் மட்டுமே கள்ளநோட்டாக உள்ளது. 91 சதவீத பணம் ரியல் எஸ்டேட்டிலும், தங்கக் கட்டிகளாகவும் உள்ளன. ஊழலை ஒழிக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 2014-15ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெருமுதலாளிகள் வங்கியில் இருந்து வாங்கிய 12 லட்சம் கோடி ரூபாயை திரும்பிச் செலுத்தவில்லை. அதை வசூலிக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
கிராமப்புறங்களில் 90 சதவீத மக்களிடம் வங்கிக் கணக்கோ, ஏடிஎம் கார்டோ கிடையாது. கூட் டுறவு வங்கிகள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என அறிவித்ததால் கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும், பொதுமக்களும் கடந்த 10 நாட்களாக பெரும் சிரமத்தை அடைந்துள்ளனர். தனியார் அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குவ தில்லை. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் நல்லச் சந்தை முடங்கி, கள்ளச்சந்தை அமோகமாக நடைபெறுகிறது.
எனவே, ஏழை எளிய மக்களின் துயரைப் போக்கும் வகையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை கையில் ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
அப்போது இரா.முத்தரசன் பேசியதாவது:
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை எனக்கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். ஆனால், முன்கூட்டியே சரியான திட்டமிடல் இல்லாததால் வங்கிகள், ஏ.டி.எம்மில் ஏழை, நடுத்தர மக்கள் பணம் எடுக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால் கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், பதுக்கல்காரர்கள், பெருமுதலாளிகள் பாதிக்கப்பட்டதாகவே தெரியவில்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டிருப்பது கறுப்புப் பணத்தை பதுக்கவே வழி வகுக்கும். எனவே, மத்திய அரசு உடனடியாக மக்களின் துயரங்களைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முத்தரசன் பேசினார்.