Published : 24 Sep 2022 06:52 AM
Last Updated : 24 Sep 2022 06:52 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் மூன்று மாதங்கள் நடைபெற்ற முதற்கட்ட தொல்லியல் ஆய்வில் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் விரிவான 2-ம் கட்ட ஆய்வை நடத்த மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரை அடுத்த ஒரகடம் வடக்குப்பட்டு கிராமப் பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 3-ம் தேதி முதல்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய தொல்லியல் துறை தொடங்கியது. முதல் மூன்று மாதங்கள் ஆரம்பக் கட்ட ஆய்வை மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் அங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் துறையினரே எதிர்பாராத வகையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதனைத் தொடந்து இந்தப் பகுதியை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்து ஆராய்ச்சியை விரிவுபடுத்த தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது 100 அடி அகலம், 100 அடி நீளத்துக்கு மட்டுமே ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையிலான அதிகாரிகள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இடத்தில் தோண்ட தொடங்கிய சில நாட்களிலேயே பழங்கால கட்டிட அமைப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. பழைய கற்களை பயன்படுத்தி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இதனைத் சுற்றி பள்ளங்கள் தோண்டியபோது பழங்கால கல் மணிகள், கண்ணாடி மணி, எலும்பு, செம்பு காசு, பானையோடுகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்டபோது ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள், ரவுலட் ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது 1.6 கிராம் எடை கொண்ட இரு தங்க காதணிகள் கிடைத்துள்ளன. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காலத்தை துல்லியமாக கணிக்க ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்தப் பகுதியில் வரலாற்று முந்தைய காலக் கட்டத்தில் வாழ்ந்த மக்களின் தொல்லியல் தடயங்களும், வரலாற்றின் தொடக்க காலத்தில் மக்கள் வாழ்ந்தபோது பயன்படுத்திய கருவிகளும் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மத்திய தொல்லியல் துறை வரையறுத்துள்ளது. 3 மாதங்கள் நடைபெற்ற முதல்கட்ட ஆய்விலேயே பல்வேறு தொல்லியல் பொருட்கள் கிடைத்ததைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் 2-ம் கட்ட ஆய்வை விரிவுபடுத்த தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறும்போது, “பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. பழங்கால தங்க அணிகலன் இரண்டு கிடைத்துள்ளன. இந்த இடம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். இந்தப் பகுதியில் ஆய்வை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து இந்தப் பகுதியில் கூடுதல் பரப்பில் விரிவான ஆய்வு நடைபெறும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT