Published : 07 Nov 2016 06:06 PM
Last Updated : 07 Nov 2016 06:06 PM

தமிழக வங்கி பணியிடங்களை தமிழர்களால் நிரப்புக: ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள வங்கிப் பணியிடங்களை தமிழ்நாட்டினரைக் கொண்டு நிரப்ப வங்கிப் பணியாளர் தேர்வாணையங்கள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாரத ஸ்டேட் வங்கிக்கு 17,140 இளநிலை உதவியாளர்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய சென்னை வட்டாரத்துக்கு நியமிக்கப்பட்ட 1563 பேரில் கணிசமானவர்கள் கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. தமிழகத்தின் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் வங்கிப் பணிக்கான ஆள்தேர்வுகள் இரு முறைகளில் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இந்திய வங்கிப் பணியாளர் நிறுவனத்தின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் அதற்குத் தேவையான பணியாளர்களை அதுவே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

மற்ற வங்கிகளுக்கான பணியாளர்கள் தேசிய அளவில் பொதுவாக தேர்வு செய்யப்படும் நிலையில், பாரத ஸ்டேட் வங்கி மட்டும் வட்டார அளவில், ஆனால் ஒரே தேர்வின் மூலம், பணியாளர்களை தேர்ந்தெடுத்து நியமிக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட ஆள்தேர்வு அறிவிப்பில், நாடு முழுவதும் 17,140 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், இவர்களில் 1563பேர் தமிழ்நாடு, புதுச்சேரியை உள்ளடக்கிய சென்னை வட்டாரத்தில் பணியமர்த்தப்படுவர் என்றும் அறிவித்தது. போட்டித்தேர்வு ஒன்று தான் என்றாலும், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனியே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒருவர் ஒரு வட்டாரத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்; ஒவ்வொரு வட்டாரத்திலும் அதற்கு விண்ணப்பித்து தேர்வானவர் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதன்படி சென்னை மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் கேரளம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று இப்போது தெரியவந்திருக்கிறது. இதை வங்கி நிர்வாகமும் ஒப்புக் கொண்டிருக்கிறது. கேரளம் மற்றும் வட மாநிலங்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே பணியிடங்கள் உள்ளன.

உதாரணமாக கேரளத்தில் மொத்தம் 294 பணியிடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் மிக அதிக பணியிடங்கள் உள்ளன என்பதால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் அவர்களின் மாநிலங்களில் தேர்வு எழுதுவதை விடுத்து தமிழகத்திற்கு படை எடுத்தனர். அதனால் தான் தமிழகத்திற்கான பணியிடங்களில் பெரும்பாலானவற்றை வட மாநிலங்கள் மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதேநேரத்தில் தமிழக மாணவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதில்லை. இதனால், பிற மாநிலங்களிலும் வாய்ப்பு கிடைக்காமல், தமிழகத்தில் கிடைத்த வாய்ப்பையும் கோட்டை விட வேண்டிய நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தேசிய அளவில் பொதுவாக தேர்வுகள் நடக்கும் போது, அதிக எண்ணிக்கையிலான இடங்களுக்கு போட்டியிட முடியும் என்பதால், தமிழர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வட்டார வாரியாக காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் அந்தந்த வட்டாரங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது தான் சமூக நீதி, இயற்கை நீதி மற்றும் நடைமுறை எதார்த்தத்தின் அடிப்படையில் சரியானதாக இருக்கும்.

இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தால் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 1563 இடங்களும் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே கிடைத்திருக்கும். இந்த பணியிடங்கள் உள்ள கிளைகள் தமிழகத்தில் தான் உள்ளன என்பதாலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் தான் இந்த கிளைகளுக்கு வருவாயும், லாபமும் கிடைக்கின்றன என்பதாலும் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள காலியிடங்களை அவ்விரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்புவது தான் சரியானதாகும்.

அதுமட்டுமின்றி, வங்கிப் பணி என்பது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவை செய்ய வேண்டிய பணியாகும். வாடிக்கையாளர்களுடன் அவர்களின் தாய்மொழியில் பேசுவதன் மூலம் மட்டுமே சிறப்பாக சேவை செய்ய முடியும். அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டுள்ள கேரளம் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ் அறவே தெரியாது; ஆங்கிலமும் முழுமையாகத் தெரியாது என்பதால், அவர்களால் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் சேவை செய்ய முடியாது. மேலும், இவர்கள் மொழி தெரியாததை காரணம் காட்டி நகர்ப்புற கிளைகளில் தங்கி விடுவார்கள் என்பதால், கிராமப்புற கிளைகளில் போதிய ஊழியர்கள் இருக்க மாட்டார்கள்; அங்குள்ள மக்களுக்கும் சேவை கிடைக்காது.

அதேநேரத்தில் மற்றொரு உண்மையையும் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். கேரளம் மற்றும் வட இந்தியரால் தமிழகத்தில் போட்டித்தேர்வு எழுதி வங்கிப் பணியில் சேர முடிகிறது. காரணம் அவர்கள் வங்கித்தேர்வை சிறப்பாக எழுதும் அளவுக்கு தயாராகியுள்ளனர். அதேநேரத்தில் அவர்களால் ஆந்திரத்தில் உள்ள 1385 பணிகளில் ஒன்றைக்கூட கைப்பற்ற முடியவில்லை. காரணம் அவர்களை விட, ஆந்திர மாணவர்கள் இன்னும் சிறப்பாக படித்து தயாராகியுள்ளனர் என்பது தான்.

ஆனால், தமிழக மாணவர்கள் தமிழகத்திலும் தேர்ச்சி பெற முடியாமல், பிற மாநிலங்களிலும் வெல்ல முடியாமல் தோல்வியடைவதற்கு காரணம் தமிழ்நாடு மாநிலப்பாடத் திட்டம் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. பல்வேறு தருணங்களில் இதை சுட்டிக்காட்டி, பாடத்திட்டத்தை மேம்படுத்துமாறு வலியுறுத்திய போதிலும் அதை தமிழக அரசு காதில் வாங்கவில்லை.

இத்தகைய சூழலில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற வகையில், தமிழகத்தில் உள்ள வங்கிப் பணியிடங்களை தமிழ்நாட்டினரைக் கொண்டு நிரப்ப வங்கிப் பணியாளர் தேர்வாணையங்கள் முன்வர வேண்டும். இக்கோரிக்கையை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.

அதேநேரத்தில், எந்த அடிப்படையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், அதில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் மாநிலப் பாடத்திட்டத்தை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x