பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ-யை நசுக்குவதில் பாஜக அரசு கூடுதல் கவனம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

திருமாவளவன் | கோப்புப்படம்
திருமாவளவன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகியவை அகில இந்திய அளவில் கட்டுக்கோப்புடனும் கருத்தியல் வலுவுடனும் அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டி வருவதால், இவ்வியக்கங்கள் ஒரு மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து விடக் கூடாதென்னும் உள்நோக்கத்தில்தான் பாஜக அரசு, இவ்வியக்கங்களை நசுக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள், அலுவலகங்களில் நுழைந்து அவர்களைத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இத்தகைய இஸ்லாமிய விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனநாயக வழியில் வெளிப்படையாக இயங்கும் ஒரு வெகுமக்கள் இயக்கம்தான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் ஆகும். இவ்வியக்கங்களின் தலைமை பொறுப்பில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இடம்பெற்றிருந்தாலும் இந்துக்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தவர்களும் தலைமைத்துவப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.

அதேபோல, இவ்வியக்கங்கள் இஸ்லாமியர்கள் நலன்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுகிற மையநீரோட்ட அமைப்புகளே ஆகும். ஆனால், தொடர்ந்து பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இவ்விரு இயக்கங்களையும் குறிவைத்து, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக முத்திரை குத்தி வெகுமக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அகில இந்திய அளவில் கட்டுக்கோப்புடனும் கருத்தியல் வலுவுடனும் அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டி வருவதால், இவ்வியக்கங்கள் ஒரு மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து விடக் கூடாதென்னும் உள்நோக்கத்தில்தான் பாஜக அரசு, இவ்வாறு இவ்வியக்கங்களை நசுக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் நடந்த பரிசோதனைகளில் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர்.

இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரானவையாகும். எனவே, இவ்வாறான சிறுபான்மையின வெறுப்பு அரசியலைச் சனாதன சங்பரிவார் அரசு கைவிட வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in