Published : 23 Sep 2022 04:57 PM
Last Updated : 23 Sep 2022 04:57 PM

“சுகாதாரத் துறையின் குறைகளுக்கு நாங்கள் பலிகடாவா?” - அரசு மருத்துவர்கள் குற்றச்சாட்டு

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: ''பொது சுகாதாரத் துறையில் நிர்வாக குழப்பம் காரணமாக குறைகளை மறைக்க மருத்துவர்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம்'' என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் கே.செந்தில் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: ''கடந்த நான்கு நாட்களுக்கு முன் சுகாதாரத் துறை இயக்குநர் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க மதிய நேரம் அனைத்து மருத்துவர்களும் களத்திற்கு சென்று காய்ச்சல் ஆய்வு செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். ஆனால், அதேநேரத்தில் பிரசவத்தில் சிக்கல்கள், தவறுகள் நடந்தால் மருத்துவர்கள் விசாரணையின்றி இடமாற்றம் செய்யப்படுகின்றனர். தற்போது பொது சுகாதாரத் துறை தலைமையின் கீழ் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக தண்டிக்கும் எண்ணத்தில் இயங்கி வருகிறது. விசாரணை கிடையாது என்ற நிலையில் செயல்படுகிறார்கள்.

பொது சுகாதாரத் துறையில் 2007-ஆம் ஆண்டில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பிரசவம் 24 மணி நேரமும் மூன்று ஷிஃப்ட் முறையில் பணியாற்றும் செவிலியர்களால் பார்க்கப்படும் என்னும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் சுமார் 24 மணி நேரம் செயல்படும் 400 ஆரம்ப சுகாதார நிலையம், 1600 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று ஷிஃப்டுகளில் பதிவு பெற்ற செவிலியர்கள் பிரசவங்கள் பார்ப்பார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உயர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கு 108 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிரசவங்கள் தடையின்றி நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1600 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். 24 மணி நேர 400 ஆரம்ப நிலையங்களில் இருக்கும் மருத்துவர் மூன்று அல்லது இரண்டு ஷிப்டுகளோ பணி செய்வர். பணி செய்யும் செவிலியர்கள் அந்த நேரத்தில் பிரசவங்களில் ஏதேனும் சந்தேங்கள் இருந்தால் பணி மருத்துவர்களை அழைத்து காண்பிப்பார்கள். மருத்துவர்கள் பணியில் இல்லாவிட்டால் செவிலியர்களே பிரசவம் செய்வர்.

கடந்த ஒரு ஆண்டு காலமாக செவிலியர்களுக்கு பிரசவ கால சிக்கல்களின் போது ஆலோசனை வழங்க 'மெண்டார்' (Mentor) என்ற வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களை மாவட்டந்தோறும் தொலைபேசிகளில் அழைத்து வழங்க நியமித்துள்ளது. அதன்படி பிரசவிக்கும்போது செவிலியர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்கள் நியமிக்கப்பட்ட மாவட்ட சிறப்பு மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை பெறுவார்கள். இவ்வாறு நியமிக்கப்படும் சிறப்பு மருத்துவர்கள் ஏற்கெனவே மருத்துவப் பணிகளில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரான இந்த தொலைபேசி ஆலோசனைத் திட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் இந்தத் திட்டம் தொடங்கியது முதல் எதிர்த்து வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுபோல் செவிலியர்கள் சிறப்பு மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரசவம் பார்ப்பதை நோயாளிகளின் உறவினர்கள் பணி மருத்துவர் பணியில் இல்லாமலே தொலைபேசியில் சிகிச்சை அளிப்பாக எண்ணுகிறார்கள். தவறாக தகவல்கள் பரவுவதால் மருத்துவர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். பிரசவம் போன்ற அவசரகால முக்கிய சிகிச்சைகளுக்கு தொலைபேசியில் ஆலோசனை வழங்கக்கூடாது. ஏனவே பொது சுகாதாரத் துறை இதற்கு முன்பு இருந்து வந்த நிகழ்வுகளை மாற்றி பிரசவத்தின்போது மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று தற்போது வலியுறுத்தி வருகிறார்கள். இல்லாவிட்டால் தண்டனை என்ற முறையை பின்பற்றி வருகிறார்கள்.

அப்படியானால், தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையே பணியில் இருப்பார்கள். அந்த நேரங்களில் மட்டுமே அந்த நிலையங்களில் பிரசவம் பார்க்கப்படும். அதுபோல் 24 மணி நேரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அதற்கு ஏற்ப அந்தந்த நேரங்களில் மட்டுமே பிரசவம் பார்க்கப்படும் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும். மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரான மென்டார் சிறப்பு மருத்துவர் தொலைபேசியில் ஆலோசனை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். காலியாக உள்ள ஆயிரம் மருத்துவர்கள் பணியிடங்கள உடனடியாக நிரப்ப வேண்டும். பொது சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகளை மறைத்து மருத்துவர்களை பலிகடா ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்? இனி விசாரணை இன்றி மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x