Last Updated : 23 Sep, 2022 02:16 PM

 

Published : 23 Sep 2022 02:16 PM
Last Updated : 23 Sep 2022 02:16 PM

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்க கோரும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு: நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கக் கோரி குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சித் தலைவர், 2 எம்எல்ஏக்கள் உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வேண்டும், மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான சிவா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத் கட்சி நிர்வாகிகள், திமுகவினர் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறும்போது, "புதுச்சேரி ரேஷனில் ஏற்கெனவே போடப்பட்டு வந்த 10 கிலோ அரிசியையாவது வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூட அதிகாரிகள் திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்தி வருகின்றனர். ரேஷன் கடைகளை மூடியுள்ளதற்கும், சம்பளம் கொடுக்கப்படாததால் ரேஷன் கடை ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கும் ஆட்சியில் இருப்பவர்கள் வெட்கப்பட வேண்டும். பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றனர்.

ஆனால், ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசி கூட வழங்கவில்லை. புதுச்சேரி கூட்டுறவு சொசைட்டி, பாப்ஸ்கோ மற்றும் தனியாரின் கீழ் 584 ரேஷன் கடைகள் உள்ளது. எந்த ரேஷன் கடைகளும் திறக்கப்படவில்லை. தமிழகம், கேரளா ஏன் பாஜக ஆளும் மாநிலங்களுக்குக்கூட சென்று ரேஷன் கடைகள் செயல்பாட்டை ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். ரேஷன் கடைகளை மூடும் ஒரு ஆட்சி தேவையா?" என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை திமுக மாநில கழக அமைப்பாளர் சிவா தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. தடுப்புகளை வைத்து போலீஸார் தடுத்தபோது அதைத் தாண்டி வர முயன்றனர். இதனால், எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x