Published : 23 Sep 2022 06:28 AM
Last Updated : 23 Sep 2022 06:28 AM

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு: ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார் 

சென்னை: தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 11 மருத்துவர்களுக்கு அதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்து வர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையைக் களையும் வகையில் மாதம் ரூ.500 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட பதிவு செய்துள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதன்பின் இந்த ஓய்வூதியம் 2011 டிசம்பரில் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலை அடிப்படையில், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க மருத்துவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், 2022-23-ம் ஆண்டு மருத்துவத் துறை மானிய கோரிக்கையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றம் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்களுக்கான ஓய்வூதியம் நடப்பாண்டு முதல் ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்துக்கான உத்தரவுகளை பரம்பரை மருத்துவர்களில் 11 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் எஸ்.கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x