Published : 23 Sep 2022 06:36 AM
Last Updated : 23 Sep 2022 06:36 AM

என்ஐஏ, அமலாக்கத் துறையின் சோதனை, கைது நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ தொடர்புடைய இடங்களில் தேசியபுலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபி ஐகண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசிய அளவில் என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகள், இயக்கத்தின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளின் அநியாய கைதுகள், அடக்குமுறைகள் மற்றும் உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் போக்கு ஆகியவற்றை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

என்ஐஏவின் ஆதாரமற்ற கூற்றுகள், பரபரப்பான நடவடிக்கைகள், பயங்கரவாத சூழலை உருவாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை.

விசாரணை ஏஜென்சிகளை பொம்மைகளாகப் பயன்படுத்தி சோதனை நடத்துகின்றனர். இத்தகைய பயமுறுத்தும் தந்திரங்களைக் கண்டு பாப்புலர் ஃப்ரன்ட்ஒருபோதும் அஞ்சாது. நமது நேசத்துக்குரிய நாடு, அதன் ஜனநாயக விழுமியங்கள் மற்றும்அரசியலமைப்பின் ஆன்மாவை மீட்டெடுப்பதற்கான போராட்டத்திலும், அதன் நிலைப்பாட்டிலும் இந்த இயக்கம் உறுதியாக நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸி வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு தழுவிய அளவில் தலைவர்களின் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள்,எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்கான முயற்சிகளின் உறுதியான அறிகுறி. எதிர்ப்புக் குரல்களை அடக்கி ஒடுக்க, இதுபோன்ற சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளால் முடியும் என கனவு காண்கின்றனர். அது கனவாகவே இருக்கும். இத்தகைய அநியாயமான சோதனைகள், கைதுநடவடிக்கைகள் ஆகியவை மக்களின் போராட்டங்கள் மூலம் வீழ்த்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு எதிர்ப்புதெரிவித்து சென்னை திருவொற்றியூர், பழைய வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, ஆயிரம்விளக்கு உட்பட 6 இடங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அடுத்தடுத்து போராட்டம் நடத்தினர். என்ஐஏ சோதனை, கைது நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x