மணல் குவாரி முறைகேட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை - மதுரை உயர் நீதிமன்ற கிளை எச்சரிக்கை

மணல் குவாரி முறைகேட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை - மதுரை உயர் நீதிமன்ற கிளை எச்சரிக்கை
Updated on
1 min read

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மலட்டாற்றில் மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி திசை வீரபாண்டியன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதன் விவரம்:

மலட்டாற்றில் மங்களம் கிராமத்தில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

குவாரிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இந்த குவாரியில் கேமரா பொருத்தவில்லை. 15 அடி ஆழம் வரை தோண்டி மணல்அள்ளி வருகின்றனர். இது சட்டவிரோதம். குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தால் அந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகள் நடைபெறாமல் பாதுகாப்பது முக்கியம். இதனால் மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்.26-க்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in