Published : 23 Sep 2022 07:03 AM
Last Updated : 23 Sep 2022 07:03 AM

50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு முத்தம்பாள்புரம் காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து காணாமல்போன காலசம்ஹாரமூர்த்தி உலோக சிலை.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்பாள்புரம் காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன காலசம்ஹாரமூர்த்தி உலோக சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மீட்டு தமிழகம் கொண்டு வர சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்பாள்புரம் காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்த காலசம்ஹாரமூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தியின் உலோக சிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது. மேலும், அந்தச் சிலைக்குப் பதிலாக அதே வடிவில் கோயிலில் போலி சிலை வைக்கப்பட்டிருந்தது.

அந்தச் சிலை போலியானது என சந்தேகம் அடைந்த கோயிலின் செயல் அலுவலர் ஜி.சுரேஷ் கடந்த 2020-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிஐடி டிஎஸ்பி முத்துராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், அந்தக் கோயிலில் வழிபட்டு வரும் காலசம்ஹாரமூர்த்தி சிலை போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, காசி விஸ்வநாதர் கோயிலின் புகைப்படங்களை ஆவணப்படுத்தி வைத்துள்ள, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தை டிஎஸ்பி முத்துராஜா தொடர்புகொண்டு, அக்கோயிலில் எடுக்கப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட சிலைகளின் புகைப்படங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, சிலைகளின் படங்கள் வாங்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், ஏல மையங்கள் மற்றும் தனியார் சிற்றேடுகளில் சிலைகளை தேடுவதற்காக, குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஒரு விரிவான தேடலுக்குப் பிறகு, திருடுபோன காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டிஸ் ஏல மையத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிலையின் மதிப்பு ரூ.35 கோடியாகும்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து காலசம்ஹாரமூர்த்தி சிலையை மீட்டுக் கொண்டு வர சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x