Published : 24 Nov 2016 12:42 PM
Last Updated : 24 Nov 2016 12:42 PM

தமிழகத்தில் விரைவில் புதிய விளையாட்டுக் கொள்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் புதிய விளையாட்டுக் கொள்கையை முதல்வர் வெளியிடுவார் என, பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா, தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:

ஒலிம்பிக் போட்டியில் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் பதக்கம் பெற்றுள்ளனர். வரும் 2020-ம் ஆண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்த எண்ணிக்கையை 24 ஆக உயர்த்த வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

‘சேம்பியன்ஷிப் டெவலப்மென்ட்’ என்ற திட்டத்தில் 12 முதல் 18 வயது வரை உள்ள ஏழை குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டு, விளையாட்டுத் திறன் ஊக்கப்படுத்தப்படும். இத்தொகையை உயர்த்தி முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.

தமிழக முதல்வர் நிறைவேற்றிய திட்டங்களால்தான் கிராமங்களில் உள்ள மாணவ, மாணவியருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. மீனவர்களுக்கு இயற்கையாகவே துடுப்புப் போட்டி உள்ளிட்டவற்றில் ஆர்வம் இருக்கும். இது போன்ற பல போட்டிகளை கடலில் அவர்கள் விளையாடும் வகையில் பயிற்சி கொடுக்க ரூ.5 கோடியில் பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களை இன்னும் ஊக்கப்படுத்த, புதிய விளையாட்டுக் கொள்கை விரைவில் முதல்வரால் வெளியிடப்பட உள்ளது” என்றார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி, சுந்தரராஜ், தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராஜகோபால சங்கரா, மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x