Published : 23 Sep 2022 04:10 AM
Last Updated : 23 Sep 2022 04:10 AM

திண்டுக்கல் - பாலக்காடு வழித்தடத்தில் நாளை முதல் 3 ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கம்

பொள்ளாச்சி

திண்டுக்கல் - பாலக்காடு வழித்தடத்தில் நாளை (செப். 24) முதல் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்துடன் தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயில் மார்க்கமாக, திண்டுக்கல் - பாலக்காடு ரயில் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணியுடன் பொள்ளாச்சி -போத்தனூர் ரயில்பாதை மின்மயமாக்கும் பணியும் நடைபெற்றது.

முதல்கட்டமாக பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடம் கடந்தாண்டு மின்மயமாக்கப்பட்டது. தற்போது, திண்டுக்கல் - பாலக்காடு வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், மின் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளி யிட்ட செய்திக் குறிப்பில், “சென்னை - பாலக்காடுஎக்ஸ்பிரஸ் (எண் 22651/ 22652), பாலக்காடு -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (எண், 16731/ 16732)மற்றும் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் (எண் 16343/ 16344) ஆகிய ரயில்கள் மின்சார இன்ஜின் பொருத்தி நாளை முதல் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன், பழநி - பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை மணிக்கு, 70 கி.மீ.-யில் இருந்து, 100 கி.மீ.-க்குஉயர்த்த அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மின்சாரரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x