

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதுபோன்ற வீடியோ சமூக வலை தளங்களில் நேற்று வெளியானது. இதுகுறித்து, விரைந்து விசாரணை நடத்தும்படி மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலைக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
அதன்படி, பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளியின் தமிழ் முதுகலை ஆசிரியர் அனுமுத்துராஜ் என்பவர், தலைமை ஆசிரியர் காந்திமதிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதற்காக, 7-ம் வகுப்பு மாணவர்கள் இருவரை அழைத்து கழிப்பறையை சுத்தம் செய்யவைத்து, அதை தன் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஆசிரியர் அனுமுத்துராஜை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.