Published : 22 Sep 2022 01:36 PM
Last Updated : 22 Sep 2022 01:36 PM

ஓசூர் - யஸ்வந்த்பூர் மெமு விரைவு சிறப்பு ரயில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கம்: பயணிகள் வரவேற்பு

ஓசூர்: கரோனா ஊரடங்கு எதிரொலியாக கடந்த 2 ஆண்டுகளாக ஓசூர் - யஸ்வந்த்பூர் (பெங்களூரு) இடையே நிறுத்தப்பட்டிருந்த மெமு விரைவு சிறப்பு மின்சார ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யஸ்வந்த்பூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் காலை 7.50-க்கு ஓசூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது ஓசூர் - யஸ்வந்த்பூர் மெமு விரைவு சிறப்பு ரயிலுக்கு ஓசூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்து, மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரயிலுக்கு மாலை அணிவித்து பூஜை நடத்தி பயணிகளுக்கு இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.

ஓசூரிலிருந்து காலை 8.15 மணிக்கு யஸ்வந்த்பூர் புறப்பட்டு சென்ற இந்த ரயிலுக்கு பயணிகள் சங்க நிர்வாகிகள் மலர் தூவி வழியனுப்பி வைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஓசூர் - யஸ்வந்த்பூர்(பெங்களூரு) இடையே இயக்கப்படும் இந்த மெமு விரைவு ரயிலில் முதல் நாளான இன்று சுமார் 500 பேர் பயணம் செய்தனர்.

இது குறித்து ஓசூர் ரயில் நிலைய மேலாளர் குமரன் கூறும்போது, “தென்மேற்கு ரயில்வே பெங்களூரு மண்டலத்துக்குட்பட்ட ஓசூர் ரயில் நிலையத்தில் கரோனா ஊரங்கு எதிரொலியாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஓசூர் - யஸ்வந்த்பூர் மெமு விரைவு சிறப்பு மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள 12 பெட்டிகளில் மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யலாம். ஓசூர் - பெங்களூரு இடையே பணி மற்றும் கல்வி நிமித்தமாக தினமும் சென்று வரும் பயணிகளின் வசதிக்காக மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர 6 நாட்களும் காலை, மாலை இருவேளையும் இயக்கப்படுகிறது.

ஓசூர் ரயில் நிலையத்துக்கு காலை 7.50 மணிக்கு வருகை தரும் இந்த ரயில் மீண்டும் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு யஸ்வந்த்பூருக்கு செல்கிறது. அதேபோல மாலை 4.30 மணிக்கு ஓசூர் ரயில் நிலையம் வரும் இந்த ரயில், மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு யஸ்வந்த்பூர் செல்கிறது. இந்த ஓசூர் - யஸ்வந்த்பூர் மெமு விரைவு சிறப்பு மின்சார ரயில் கட்டணம் ரூ.40 ஆகும். இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x