Published : 22 Sep 2022 09:12 AM
Last Updated : 22 Sep 2022 09:12 AM

தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவனத்தில் புகுந்து மிரட்டல்: வைரலாகும் காட்சிகள்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்ற திமுக-வை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமாக 1.77 ஏக்கர் நிலம்உள்ளது. அந்த இடத்தை் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து டேஜுங் மோபார்ட்ஸ் (Daejung Moparts pvt ltd) எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே பூஜாகோயல் சம்பந்தப்பட்ட தனியார்நிறுவனத்தை வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் குத்தகை காலம் முடிவடையாததால் தங்களால் வெளியேற முடியாது என திட்டவட்டமாக கூறி வந்துள்ளனர். இது தொடர்பாக 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது‌.

இதனிடையே, அந்த நிலத்தின் உரிமையாளர் பூஜா கோயல் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினரை அணுகி தங்களது இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை வெளியேற்றி தருமாறு கூறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்நிறுவனத்துக்கு வந்த எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா இது தொடர்பாக அந்த நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதில் இருவருக்கும் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

இதனுடைய சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதேபோல் கடந்த 6 மாதத்துக்கு முன் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி என்பவரும் மிரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நிறுவன நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஹூண்டாய் நிறுவனத்துக்கு கார் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறோம்.

20 ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்குமுன் இருந்த இந்த நிறுவன நிர்வாகஇயக்குநர் ஆர்.கே.சர்மா இந்த நிறுவனத்தில் ரூ.230 கோடி ஊழல்செய்துவிட்டு தகவல் ஏதும் தெரிவிக்காமல் தலைமறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்மா 2008-ம் ஆண்டு குறைந்த விலைக்கு வட மாநிலத்தை சார்ந்த ஒருவருக்கு இந்த இடத்தை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த இடத்தை காலி செய்ய சொல்லி தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா நேற்று காலை எங்கள் அலுவலகம் வந்து மிகவும் தர குறைவாக நடந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார். அரசுஇதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்

இதுகுறித்து தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கூறியதாவது, மறைமலைநகரில் செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் என் நண்பருக்கு சொந்தமானது. அவரை அந்த இடத்தில் நுழைய விடாமல் அந்த நிறுவன நிர்வாகிகள் தடுத்து வருகின்றனர். இதனால் என்ன பிரச்சினை என்பதை கேட்கவே நான் அங்கு சென்றேன்.

எம்எல்ஏ என்றும் பாராமல் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.இது தொடர்பாக இன்று காலைஅதே நிறுவனம் முன்பு உரியஆவணங்களுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x