Published : 22 Sep 2022 06:36 AM
Last Updated : 22 Sep 2022 06:36 AM

இந்துக்கள் குறித்து கருத்துகள் - எதிர்ப்பு வலுத்தும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க மறுப்பதால் சர்ச்சை

சென்னை: இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மன்னிப்புக் கேட்க மறுப்பதால் எதிர்ப்பு வலுப்பெறுவதுடன், சர்ச்சையும் நீடிக்கிறது.

திமுக துணைப் பொதுச் செயலரான ஆ.ராசா, ஏற்கெனவே சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து, விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அப்போதைய முதல்வர் பழனிசாமி ஆகியோரின் பிறப்பை ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையானது. பின்னர், தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், மனதைப் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் ஆ.ராசா கூறினார்.

சில மாதங்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையிலேயே, ‘‘அண்ணா வழியில் முதல்வர் பயணிக்கிறார். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளாதீர்கள். தனிநாடு கேட்க எங்களைத் தூண்ட வேண்டாம். மாநில சுயாட்சி தாருங்கள்’’ என்று பேசி, பாஜகவின் எதிர்ப்பை சம்பாதித்தார்.

அதேபோல, மாட்டிறைச்சி தொடர்பாக பாஜகவை விமர்சித்த ராசா, ‘‘ஆர்.எஸ்.எஸ்.,மோகன் பகவத், மோடி, அமித் ஷாவுக்கு தைரியம் இருந்தால், முஸ்லிம்கள் தவிர்த்து மாட்டுக்கறி சாப்பிடுவோர் யாரும் இந்துக்கள் இல்லை என்று சொல்லுங்கள்’’ என்று சவால் விட்டார். இந்தப் பேச்சு பாஜகவினரை பாதித்தாலும், பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி பெரியார்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, ‘‘நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லை என்றால், பார்சியனாக இல்லை என்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?

இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்கச் சொன்னால்தான், அது சனாதனத்தை முறியடிக்கிறது என்பதை விடுதலையும், முரசொலியும், திமுகவும், திராவிடர் கழகமும் எழுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மத்தில் 4-வது வர்ணமாகிய சூத்திரர்கள் மனு ஸ்மிருதியில் இழிவுபடுத்தப்பட்டது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பி பேசினார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ வெளியானதும், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ராசாவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், ஆ.ராசா தனது ட்விட்டர்பக்கத்தில், ‘‘சூத்திரர்கள் யார்? அவர்கள்இந்துக்கள் இல்லையா? மனு ஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு மறுக்கப்பட்டது? அரசியல் அதிகாரம், பரப்புரையால் 90 சதவீதம் இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்’’ என்றும் பதிவிட்டு, தனது கருத்துகளுக்கு வலு வேற்றினார்.

இதையடுத்து, ராசா மீது பல்வேறு அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்படுவதுடன், கோவை, நீலகிரியில் போராட்டங்களும், கடையடைப்பும் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன், அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பாஜகவுடன், அதிமுகவும் சேர்ந்து கொண்டது. பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதேநேரம், இவ்வளவு எதிர்ப்பு கிளம்பினாலும், திமுக தலைமையோ, மூத்த நிர்வாகிகளோ எந்த ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அவர் கேள்வியே புரியாததுபோல அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையே தனது கருத்து தொடர்பாக இதுவரை மன்னிப்பு கேட்காத ஆ.ராசா, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துப் பேசும்போது, ‘‘மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் இல்லை. மன்னிப்பு கேட்பது என்பது மனித மாண்பு. நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்றால், அவனைவிட முட்டாள், அயோக்கியன் வேறு யாரும் இல்லை. நான் மன்னிப்பு கேட்கத் தயார். என்ன மன்னிப்புன்னு சொல்லுங்க. இந்திய அரசியல் சட்டப்படி உறுதிமொழி எடுத்த ஆளுநர் அவ்வாறு நடந்து கொண்டாரா? நாங்கள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை. இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதானத்துக்கு எதிரானவர்கள்’’ என தெரிவித்துள்ளார்.

திமுகவின் கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும் ஆ.ராசா, பாஜக எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் இந்துக்கள் குறித்து இவ்வாறு பேசுவதும், அதற்கு மன்னிப்புக் கோர மறுப்பதும், ராசா மட்டுமின்றி, திமுக மீதான இந்து எதிர்ப்புக் கொள்கையை மேலும் வலுப்படுத்தி வருகிறது. இந்துக்களுக்கு எதிரி இல்லை என்று கூறிவரும் திமுக, வெறுப்புணர்வைத் தூண்டும் இதுபோன்ற கருத்துகள் வெளியாவதை தவிர்க்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x