Published : 22 Sep 2022 03:40 AM
Last Updated : 22 Sep 2022 03:40 AM

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை தேவை - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: மியான்மரில் சிக்கியுள்ள 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளர்.

இது தொடர்பாக முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மியான்மர் நாட்டில் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருப்பதாக மாநில அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தனியார் ஆட்கள் சேர்ப்பு முகமைகள் மூலம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக அவர்கள் தாய்லாந்து நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர், ஆன்லைன் மூலம் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்வதற்காக, அவர்களைக் கட்டாயப்படுத்தி மியான்மருக்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால், வேலை அளிப்போரால் இந்தியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் 17 தமிழர்களுடன், மாநில அரசு தொடர்பில் உள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, உடனடியாக அவர்களை மீட்கவும், பாதுகாப்பாக தாயகத்துக்கு திரும்ப அழைத்து வரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை குறித்து, மியான்மரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கு தக்க அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், மத்திய வெளியுறவுத் துறை இணை யமைச்சர் வி.முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மியான்மரில் இந்தியர்கள் சிறை பிடிக்கப்பட்டது தொடர்பாக அங்குள்ள நமது தூதர் வினய்குமாருடன் பேசினேன். விரைவில் இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை இந்தியத் தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x