Published : 22 Sep 2022 04:25 AM
Last Updated : 22 Sep 2022 04:25 AM

“பெருமையாக கருதுகிறேன்” - பிரிவு உபசார விழாவில் பொறுப்பு தலைமை நீதிபதி நெகிழ்ச்சி

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி நேற்று பணி ஓய்வு பெற்ற நிலையில் பிரிவு உபசார விழா நடந்தது. இதில், அவருக்கு புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள டி.ராஜா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். படம்: ம.பிரபு

சென்னை

பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்ததை பெருமையாக கருதுகிறேன் என பிரிவு உபசார விழாவில் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி பேசினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த செப்.12-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனால் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி கடந்த செப்.13-ம் தேதி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அவர் நேற்றுடன் (செப்.21) பணி ஓய்வு பெற்றார். இதைடுத்து, அவருக்கு உயர் நீதிமன்ற கலையரங்கில் பிரிவு உபசார விழா நேற்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் டி.ராஜா, பரேஷ் உபாத்யா, பி.என்.பிரகாஷ், எஸ்.வைத்யநாதன் உள்ளிட்ட நீதிபதிகளும், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், ஓய்வு பெற்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், கே.ரவிச்சந்திரபாபு, வி.பாரதிதாசன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன்,

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர்.

பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி நன்றி தெரிவித்து பேசும்போது, ‘‘பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்ததை பெருமையாக கருதுகிறேன்.

கடந்த 2009-ம் ஆண்டு நீதிபதியாக பதவியேற்றபோது இந்த உயர் நீதிமன்றத்தின் மதிப்பு, மரியாதையை காப்பாற்றும் விதமாக சட்டத்துக்குட்பட்டு என் நீதி பரிபாலனம் இருக்கும் என கூறினேன்.

அதன்படி, பணியாற்ற எனக்கு உறுதுணை புரிந்த சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள் என அனைவருக்கும் என மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் நாட்டிலேயே தலைசிறந்த வழக்கறிஞர்கள் உள்ளனர். அதிலும் இரண்டாம் தலைமுறை வழக்கறிஞர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர்’’ என்றார்.

பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி ஓய்வு பெற்றதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது. நீதிபதிகள் காலியிடம் 21 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி டி.ராஜா, இன்று தனது பொறுப்பை ஏற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x