Published : 22 Sep 2022 07:13 AM
Last Updated : 22 Sep 2022 07:13 AM
திருவள்ளூர்: தமிழகத்தில் இன்று முதல் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெறும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாமை நேற்று காலை திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கோளப்பன்சேரி ஊராட்சி அலுவலகம் அருகே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
பருவகால மாற்றம் வரும்போதெல்லாம் காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும். சாதாரணமாகவே எல்லா நாட்களிலும் ஒரு சதவீதம் பேருக்கு காய்ச்சல் இருப்பது இயல்பு. பருவ நிலை மாற்றங்கள் வருகிறபோது, அது ஒன்றரை சதவீதமாக உயர்வது, சாதாரணமான விஷயம். அந்த வகையில் தான் தமிழகத்தில் தற்போது காய்ச்சல் என்பது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் இன்றைய (நேற்று) நிலவரப்படி எச் 1 என் 1 பாதிக்கப்பட்டு, 353 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில், அரசு மருத்துவமனைகளில் 9 பேர், தனியார் மருத்துவமனைகளில் 285 பேர், வீடுகளில் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த 353 பேரில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 53 பேர், 5 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 61 பேர், 15 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் 167 பேர், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 72 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 அல்லது 4 நாட்களில் குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர்.
நாளை (இன்று) முதல் தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர பகுதிகளில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அந்த இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெறும். ஆகவே, இந்த காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ள அவசியமில்லை.
மேலும், ஏற்கெனவே நகர்ப்புற உள்ளாட்சித் துறை, ஊரக உள்ளாட்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறைகளின் 3 அமைச்சர்கள், செயலாளர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட அலுவலர்களை கொண்டு, முதன் முறையாக டெங்கு பாதிப்பிலிருந்து மக்களை காப்பதற்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவில் 3 துறைகளை ஒருங்கிணைத்த குழுக்கள் அமைக்கப்பட்டு தற்போது டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிகழ்வில், சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர்கள் செந்தில்குமார், ஜவஹர்லால் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT