Published : 22 Sep 2022 04:35 AM
Last Updated : 22 Sep 2022 04:35 AM
பாரதியார் சொல்படி வாழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி என பேராசிரியர் பர்வீன் சுல்தானா புகழாரம் சூட்டினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையீத் மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் கவிஞர் தமிழ்ஒளியின் 98-வது பிறந்தநாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக் குழு இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்தில் கல்லூரியின் முதல்வர் அம்துல் அஜீஸ்,பேராசிரியர் இ.சா.பர்வீன் சுல்தானா, தமிழ்நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவின் தலைவர் ச.செந்தில்நாதன், செயலாளர் இரா.தெ.முத்து, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தில் இருந்து மாறியதில்லை: கருத்தரங்கத்தில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசியதாவது: பாரதியார் மற்றும் பாரதிதாசனின் பாடல்களில் ஏதாவது ஒரு இடத்தில் தங்களது கருத்தில் இருந்து மாறுபட்டு, வேறு சிந்தனைகளில் பாடல்களை எழுதியிருப்பார்கள்.
ஆனால், கவிஞர் தமிழ்ஒளி பாடல்களில் ஒருபோதும், தான் எடுத்த கருத்தில் இருந்து மாறியது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு,கவிஞர் தமிழ்ஒளியின் மாதிரி காவியத்தை ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையீத் மகளிர் கல்லூரியின் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டது.
புகழ், படைப்பை பரப்ப வேண்டும்: ‘நமக்கு தொழில் என்பது,கவிதை, நாட்டுக்கு உழைத்தல்,இமைப்பொழுதும் சோர்வடையாமல் இருத்தல்’ என பாரதியார் சொன்னதற்கு இணங்க வாழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. தமிழ்ஒளியின் வாழ்க்கை, பொருளாதாரத்தில் பின்னடைவு கொண்டது.
நம்முடைய வாழ்வியலுக்கான பல பதிவுகளை செய்த, அவருடைய புகழ், படைப்பு தமிழ் சமூகத்தில் பரப்பப்பட வேண்டும். கவிஞர் தமிழ்ஒளி குறித்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகள், நூற்றாண்டு விழா கொண்டாடுகிறபோது நூலாக வெளியிடப்படும்.
தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு முக்கிய விழாவாகக் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நிறுவ இருக்கும் கவிஞர் தமிழ் ஒளி நினைவு அறக்கட்டளைக்கு பேராசிரியர் பர்வீன் சுல்தானா நன்கொடையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை, தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழுவின் தலைவர் செந்தில்நாதன், செயலாளர் இரா.தெ.முத்துவிடம் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT