

மன்னார்குடி நகராட்சி தொடங்கப்பட்டு நேற்றுடன் 150 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் நகரின் பாரம்பரிய அடையாளங்கள் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம், கடந்த 1.11.1866-ம் ஆண்டு 19 ஆயிரத்து 447 மக்கள்தொகையைக் கொண்டு நகராட்சியாக அறிவிக்கப் பட்டு 150 ஆண்டுகள் முடிவடைந் துவிட்ட நிலையில், தற்போது மன்னார் குடி நகரின் மக்கள்தொகை 66,997.
தொடக்கத்தில் 2 ஆயிரத்து 881 ஏக்கர் பரப்பளவு, 33 மைல் நீளமுள்ள சாலைகளைக் கொண்ட நகரமாக இருந்த மன்னார்குடியின் தற்போதைய மொத்த பரப்பளவு 11.55 சதுர கிலோமீட்டர்.
கடந்த 150 ஆண்டுகளில் இயங்கி வந்த ரயில் போக்குவரத்து 40 ஆண்டு களுக்கும் மேலாக தடைபட்டு, கடந்த 2011 முதல் மீண்டும் தொடங்கியது. அதன்பயனாக பல வர்த்தக நிறுவ னங்கள் தோன்றிவருவதும், வெளியூர் மக்கள் வந்துசெல்கின்ற நகரமாகவும் மன்னார்குடி மாறியுள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, கல்வி பயிலும் விழிப்புணர்வில் கால மாற்றத்துக்கு ஏற்றபடி நகர மக்கள் முன்னேறியுள்ளதை மறுப்பதற் கில்லை. ஆனால், நகராட்சி தொடங்கப் பட்டபோது நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நீராதார கட்டமைப் புகள் உருக்குலைந்துவிட்டன.
தெருக்களின் பின்புறத்தில் கழிவு களை கொட்டுவதற்கான நாராசம் (சாக்கடை சந்து), நகராட்சியை ஒட்டி யுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் போன்ற பாரம்பரிய அடையாளங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர் ராமநாதன் கூறியபோது, “தற்போது மன்னார்குடி நகரம் முழுவதும் பாதாளசாக்கடை திட்டத்தை அமல்படுத்தப்போவதாக திமுக, அதிமுக தலைமையிலான அரசுகளும் ஏற்றுக்கொண்டதோடு 2 முறை சட்டப்பேரவையிலேயே அறிவித்தனர். ஆனால், அது அறிவிப்பு நிலையிலேயே உள்ளது. நகராட்சியின் 9, 10, 14, 15 ஆகிய வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடைகளையும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. நாராச சந்துகள் குப்பை கொட்டப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளன. அகலமாக இருந்த நாராச சந்துகள் குறித்து ஆய்வு செய்து மீட்க வேண்டும்” என்றார்.
சமூக ஆர்வலர் சபரி கூறியபோது, “கும்பகோணம் சாலையில் பாமணி ஆற்று மேலப்பாலத்தின் எதிரே இருந்த பழமையான சுங்கச்சாவடி கடந்த 10 ஆண்டுகளுக்குள் நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்தே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அதுபோல நகராட்சிக்கு பயன் படாத பல இடங்கள் ஆக்கி ரமிப்பில் உள்ளன. அதுகுறித்து முறையான ஆய்வை நடத்தி தேவைப்படுபவை, சாத்தியமுள் ளவற்றை மீட்க வேண்டும். 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மன்னார்குடி நகராட்சிக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க ஆட்சியர் ஆவண செய்ய வேண்டும்” என்றார்.
குளங்களைத் தொலைத்துவிட்டனர்
முன்னாள் கவுன்சிலர் கி.வ.துரையரசன் கூறியபோது, “நகராட்சி தொடங்கிய ஆண்டிலேயே நகர மக்களின் நீராதார தேவையைப் பூர்த்தி செய்ய வடுவூர் வடவாற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவர தனியாக நிலத்தை விலைக்கு வாங்கி அமைக்கப்பட்ட 12 கிலோமீட்டர் நீள வாய்க்கால் முழுமையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டது. அதனை மீட்பது சாத்தியமில்லை என்ற நிலையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
அந்த நிலத்தை மீட்டு வழியில் இருக்கின்ற ஊராட்சிகளுக்கு நீராதார மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசு பயன்படுத்திகொண்டு, அதற்காக நிலமதிப்பீட்டுத் தொகையை நகராட்சிக்கு வழங்கலாம். ஆனால், இதுகுறித்து தமிழக அரசும், நகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. மேலும், நகரில் இருந்த நகராட்சிக்குச் சொந்தமான 93 குளங்களில் தற்போது 60 குளங்கள்தான் இருக்கின்றன. அதிலும் பயன்பாட்டில் உள்ளவை 20-க்குள்ளான குளங்கள்தான். மற்றவை பெயரளவில்தான் உள்ளன. நகரத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பயன்பட்டு வந்த குளங்களைத் தொலைத்துவிட்டது கவலையளிப்பதாக உள்ளது” என்றார்.