Published : 22 Sep 2022 04:50 AM
Last Updated : 22 Sep 2022 04:50 AM

காத்திருப்போர் பட்டியலில் உள்ள ரயில் பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் படுக்கை ஒதுக்கீடு முறைக்கு வரவேற்பு

சேலம்/ஈரோடு

காத்திருப்போர் பட்டியலில் உள்ள ரயில் பயணிகளுக்கு, ஆன்லைன் மூலம் படுக்கை ஒதுக்கீடு செய்யும் முறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது, என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா தெரிவித்தார்.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், வழித்தடங்களில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா ஆய்வு மேற்கொண்டார். ஈரோட்டில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரயில்வே நிர்வாகத்தால் ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. ரயிலில் முன் பதிவு செய்தவர்கள் வராத நிலையில், அடுத்ததாக காத்திருப்போர் பட்டியிலில் உள்ள பயணிகளுக்கு, ஆன்லைன் மூலம் படுக்கை ஒதுக்கீடு செய்யும் இயந்திரம் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கான 800 கையடக்க கருவிகள், பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இம்முறை யால் பயணிகளுக்கு வெளிப்படைத் தன்மையுடன், படுக்கை வசதி ஒதுக்கீடு செய்து தரப்படுவதால், பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

பொதுவாக, லோகோ பைலட்டுகள் அறையில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படவில்லை. பெண்களும் தற்போது லோகோ பைலட்களாக பணிபுரியும் நிலையில், அவர்களின் சிரமங்களை நாங்கள் உணர்ந்துள்ளோம். இந்நிலையில், சில இடங்களில் சோதனை அடிப்படையில் லோகோ பைலட் அறையில், கழிப்பறை வசதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், அவை பயன்பாட்டுக்கு ஏற்றதாய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், இப்பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

முன்னதாக, திருப்பத்தூர் முதல் சேலம் வரையிலான வழித்தடத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா நேற்று தனி ரயிலில் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் எளிதாக டிக்கெட் பெறுவதற்கான இயந்திரத்தை திறந்து வைத்தார். ஆய்வின் போது, ரயில்வே கோட்ட மேலாளர் னிவாஸ், கோட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனிடையே, பொது மேலாளர் மல்லையாவிடம், பாமக-வின் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x