

விவசாயிகளின் மரணத்தை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்தக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகளின் தொடர் மரணங்கள் மிகுந்த கவலைக்குரியது.காவிரி நீர் கிடைக்கவில்லை. பருவமழையும் பொய்த்துப் போய் உள்ள நிலையில், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நம்பிக்கை இழந்துள்ளனர்.
நவம்பரில் காவிரி பாசன மாவட்டங்கள் பச்சை போர்வை போர்த்தியது போன்று, வயல்வெளி முழுவதும் பசுமை நிறைந்ததாக காட்சியளிக்கும். ஆண்களும், பெண்களும் வயல்வெளிகளில் வேளாண்மை பணிகளில், களையெடுப்பது, உரம் தெளிப்பது போன்ற பணிகளையும், குறுவை சாகுபடி செய்தவர்கள் அறுவடையும் மேற்கொள்வார்கள்.
இவ்வாண்டு குறுவை சாகுபடி இல்லை என்ற நிலையில், சம்பா ஒருபோக சாகுபடியும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கடும் அதிர்ச்சிக்கும், அவநம்பிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என்றும் இல்லாத வகையில் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களின் துன்ப, துயரத்தை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள முன்வராதது மிகுந்த கவலைக்குரியது. அரசுகளின் அலட்சிய போக்கால் அவநம்பிக்கைக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள் தற்கொலைக்கும், அதிர்ச்சி மரணத்திற்கும் ஆளாகி, அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியதாகும்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரெகுநாதபுரம் கோவிந்தராஜன், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஆதிச்சபுரம் அழகேசன், தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த ராஜேஸ் கண்ணா, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆதனூர் ரத்தினவேல், ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
திருச்சியை அடுத்துள்ள தாயனூரை சேர்ந்த லக்கான் என்கிற சேட்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஒன்றன் பின் ஒன்றாக தொடரும் இத்துயர சம்பவங்கள் தொடராமல் தடுத்திட வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது.
உழுது உண்டு வாழ்வாரே சாவார் என்ற நிலைக்கு தமிழகம் குறிப்பாக பாசன மாவட்ட விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பது குறித்து அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். இறந்தவர்கள் குடும்பம் துயர்துடைக்கும் வகையில், தலா ரூ 25 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளித்திட அரசு முன் வரவேண்டும்.
வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம், விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ25 ஆயிரம் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.